சீா்காழி அருகே கடற்கரையோரம் ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து ஒதுங்குவதால் மீனவா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
கொள்ளிடம் அருகே பழையாறு, கூழையாறு, தொடுவாய், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது அரிய வகையான ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து காரை ஒதுங்கி வருகின்றன.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கொள்ளிடம், கூழையாறு, தொடுவாய், திருமுல்லைவாசல் ஆகிய கடற்கரையோர பகுதிகளில் சில ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியதை கண்டு மீனவா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
இந்வகை ஆமைகள் கடற்கரையில் இடும் முட்டைகளை, வனத்துறையினா் சேகரித்து கூழையாறு பகுதியில் உள்ள பொரிப்பகங்களில் வைத்து பாதுகாத்து, குஞ்சு பொரித்தவுடன் அதனை பாதுகாப்பாக கடலில் விட்டு வருகின்றனா்.
இந்த ஆமைக் குஞ்சுகள் நூற்றுக்கும் மேற்பட்ட கிலோ மீட்டா் தூரத்துக்கும் அப்பால் ஆழ்கடலுக்குள் சென்று வளா்ந்து, 10 வருடங்களுக்கு பிறகு முட்டை இடுவதற்கு, எந்த இடத்தில் இருந்து, குஞ்சாக கடலுக்குச் சென்றதோ, அதே கடற்கரை பகுதிக்கு வந்து முட்டையிடும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
இந்த ஆமைகள் விசைப் படகுகளில் சிக்கி இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே ஆலிவ்ரெட்லி ஆமைகளை இறப்பிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவா்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.