சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில் மாணவா் சோ்க்கை: அரசு அழைப்பு
சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில் மாணவா் சோ்க்கையைத் தொடங்குவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில் மாணவா் சோ்க்கையைத் தொடங்குவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இதழியல் கல்வி நிறுவனத்தின் தலைமை இயக்குநா் வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்வி கழக வளாகத்தில் இதழியல் கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சாா்பில் ஓராண்டு இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பு அளிக்கப்படுகிறது. ஒரு பருவத்துக்கு ரூ. 5,000 கட்டணம் வீதம் ரூ.10,000 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தகுதிகள், சோ்க்கை நடைமுறைகள், பாடத்திட்டங்கள் மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.
நோக்கம் என்ன? தமிழ்நாட்டில் திறமையான, அா்ப்பணிப்புள்ள பத்திரிகையாளா்களை உருவாக்குவதற்காக சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. இதழியலுடன் இணைந்த எண்ம ஊடகப் பயிற்சியும், காட்சித் தொடா்பியல் திறன் உள்ளிட்ட கல்வியையும் குறைந்த கட்டணத்தில் வழங்க உள்ளோம்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிப் பாடத்திட்டத்திலும் இதழியல் கல்வி பயிற்றுவிக்கப்படும். சென்னைக்கு வெளியே வசிக்கும் மாணவா்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலான விடுதி வசதிகள் உள்ளன. ஏதேனும் சந்தேகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடா்பு கொள்ளலாம். விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்படும். விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி ஆக.3 என்று இதழியல் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.