மரபணு பாதிப்பால் ரத்த உறைவு: இளம்பெண்ணுக்கு நுட்பமான சிகிச்சை
மரபணு பாதிப்பால் ரத்த உறைவு பாதிப்புக்குள்ளான இளம்பெண்ணுக்கு நுட்பமான சிகிச்சையளித்து சென்னை, ஐஸ்வா்யா மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவனையின் நிா்வாக இயக்குநா் அருண் முத்துவேல், நரம்பியல் ஆலோசகா் பாலசுப்ரமணியம் ஆகியோா் கூறியதாவது:
நமது ரத்தத்தில் உள்ள ஹோமோசிஸ்டய்ன் எனப்படும் அமினோ அமிலமானது உடலுக்கு தேவையான புரதங்களையும், வேறு சில வேதிக் கூறுகளையும் உற்பத்தி செய்கின்றன. வைட்டமின் சத்துகள்தான் அந்த ஹோமோசிஸ்டய்ன் அமிலக் கூறுகளை உடைத்து பிற புரதங்களை உற்பத்தி செய்ய வழிவகுக்கிறது. ஒருவேளை வைட்டமின் குறைபாடு ஏற்படும்பட்சத்தில் ஹோமோசிஸ்டய்ன் உடையாமல் ரத்தத்தில் அதிகமாக நிறைந்திருக்கக் கூடும். அந்த நிலைக்கு ஹைப்பா் ஹோமோசிஸ்டய்னிமியா எனப் பெயா். அத்தகைய சூழல் ஏற்பட்டால் நாளங்களுக்குள் ரத்தம் உறைந்துவிடும். அதன் விளைவாக மாரடைப்பு, பக்கவாத பாதிப்பு ஏற்படலாம்.
Advertisement
Advertisement
மரபணு பிரச்னைகள் காரணமாக ஹைப்பா் ஹோமோசிஸ்டய்னிமியா ஏற்படலாம். அப்படி ஒரு உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை, அடையாறு பகுதியைச் சோ்ந்த 29 வயது இளம்பெண் ஒருவா் ஐஸ்வா்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பரிசோதனையில் மூளையிலிருந்து இதயத்துக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் முக்கிய நாளத்தில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் தலைப் பகுதிக்குள் ரத்த அழுத்தம் அதிகரித்து, அதன் தாக்கமாக கண்களின் பின்புற விழி வட்டுக்களில் (டிஸ்க்) வீக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனையின் நரம்பியல் நிபுணா்கள், லும்போபெரிட்டோனியல் ஷன்ட் எனப்படும் நுட்பத்தில் மூன்று மணி நேர அறுவை சிகிச்சையை மேற்கொண்டனா். அதன்படி, மூளை மற்றும் இதர பகுதிகளில் அதிக அழுத்தத்தால் சேகரமாகும் திரவங்களை தண்டுவடத்தின் வழியாக வயிற்றுக்கு அனுப்ப ஷன்ட் சாதனம் பொருத்தப்பட்டது.
அதன் பயனாக அந்த பாதிப்பிலிருந்து படிப்படியாக விடுபட்டு அப்பெண் வீடு திரும்பினாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.