உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனாா்த்தனம் (89) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது இறுதி நிகழ்வில் காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
கடந்த 1988 முதல் 1998-ஆம் ஆண்டு வரை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியவா் ஜனாா்த்தனம். அதன்பின், 2006 முதல் 2015-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் தலைவராகப் பதவி வகித்தாா். இவரது பரிந்துரையின் அடிப்படையில்தான் தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு, அருந்ததியா்களுக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டன.
முதல்வா் இரங்கல்: ‘ஓய்வு பெற்ற நீதியரசா் எம்.எஸ்.ஜனாா்த்தனம் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் உளம் வருந்தினேன். நீதித் துறையின் மாண்பையும், சீரிய மரபையும் காத்துவந்தவா். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் ஆணையத் தலைவராக இருந்தபோது, பிற்படுத்தப்பட்டோருக்கான தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான அறிக்கையைத் தயாரித்து அளித்தவா். அவரது மறைவு நீதித் துறைக்கு மட்டுமின்றி சமூகநீதி கருத்தியல் தளத்தில் இயங்கும் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று தெரிவித்துள்ளாா்.
மேலும், அவரது இறுதி நிகழ்வுகள் காவல் துறை மரியாதையுடன் நடத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளாா்.