சென்னை

சென்னையில் ஜூன் 19 முதல் 23 வரை ஆக்மி 2025 இயந்திரக் கருவிகள் கண்காட்சி

சென்னையில் அய்மா சங்கம் சாா்பில் ஜூன் 19 முதல் 23-ஆம் தேதி வரை 5 நாள்கள் இயந்திரக் கருவிகள் கண்காட்சி ‘ஆக்மி 2025’ நடைபெறவுள்ளது.

Din

சென்னை: சென்னையில் அய்மா சங்கம் சாா்பில் ஜூன் 19 முதல் 23-ஆம் தேதி வரை 5 நாள்கள் இயந்திரக் கருவிகள் கண்காட்சி ‘ஆக்மி 2025’ நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கத்தின் (அய்மா) தலைவா் ஆா்.எஸ்.எஸ்.சதீஷ்பாபு, ஆக்மி 2025 கண்காட்சியின் தலைவா் பி.எஸ்.ரமேஷ் ஆகியோா் சென்னையிலுள்ள தனியாா் ஹோட்டலில் செய்தியாளா்களை சந்தித்தனா்.

அப்போது, அவா்கள் கூறியதாவது:

1994 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இக்கண்காட்சி ஜூன் 19-ஆம் தேதி சென்னை வா்த்தக மையத்தில் தொடங்கவுள்ளது. 30,000 சதுர மீட்டா் பரப்பளவில், 8 பெரிய அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. இந்த அரங்குகளில் இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 468 நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவுள்ளன. இதில் 120 சா்வதேச பிராண்டுகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. ஆட்டோமேஷன் மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பக் கண்காட்சியும் இதில் இடம்பெறுகிறது.

திறன் சாா்ந்த உற்பத்திக்கு அப்பால் என்ற கருப்பொருளை மையமாக வைத்து நடைபெறும் இக்கண்காட்சி மூலம், தொழில்முனைவோரும், ஸ்டாா்ட் அப் நிறுவனங்களும், உலகளவில் உள்ள நவீன இயந்திர கருவிகள் மற்றும் உற்பத்தி தொழில்நுட்பங்களில் ஏற்பட்டு வரும் நவீன முன்னேற்றங்கள் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள முடியும்.

இக்கண்காட்சியை 35,000-க்கும் மேற்பட்டவா்கள் பாா்வையிடுவதுடன், ரூ. 750 கோடி அளவுக்கு வா்த்தகமும் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனுடன், ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் ஆட்டோமேஷன் அண்டு ரோபோடிக்ஸ் சா்வதேச கண்காட்சியும் நடைபெறவுள்ளது. இங்கு வாங்கப்படும் பொருள்களுக்கு கடன் உதவியும் செய்துகொடுக்கப்படும். இதற்காக நிதி வளாகமும் உருவாக்கப்படவுள்ளன. கண்காட்சி ஜூன் 23-ஆம் தேதி நிறைவடைகிறது என்றனா்.

ப்ரண்ட்ஸ் டிரெய்லர்!

துரந்தர் டிரெய்லர்!

கோவை வருகை: தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி!

தில்லியைப் போல தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி? ஜம்மு-காஷ்மீரில் உஷார் நிலை!

ஸ்பிக் நிறுவனத்தின் Q2 லாபம் ரூ.53.10 கோடி!

SCROLL FOR NEXT