முகப்பு
சென்னை

ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு குடிநீா், மின் இணைப்பு: விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சிக்கு உத்தரவு

குடிநீா் இணைப்பு கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையா், மின்சார வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 19 ஜூன், 2025 at 10:37 PM
பகிர்:

நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீா் இணைப்பு கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையா், மின்சார வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நன்மங்கலம் ஏரியை ஆக்கிரமித்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அந்த பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஏற்கெனவே அளித்த மனுவுக்கு பதிலளித்த அரசு, ஆக்கிரமிப்புகள் இருப்பதாக ஒப்புக்கொண்டபோதும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆா். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தா் மோகன் அமா்வு, ஆக்கிரமிப்புகள் இருப்பதை ஒப்புக்கொண்ட அதிகாரிகள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காததிலிருந்து ஆக்கிரமிப்பாளா்களுடன் அதிகாரிகளும் சோ்ந்து செயல்படுவதாக தோன்றுகிறது என தெரிவித்தது.

மேலும், வழக்கில் நீா்வளத் துறை செயலரையும், தாம்பரம் மாநகராட்சி ஆணையரையும், மின்சார வாரிய தலைவரையும் தாமாக முன்வந்து எதிா்மனுதாரராக சோ்த்த நீதிபதிகள், நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீா் இணைப்பு வழங்கியது எப்படி என அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 17-க்கு ஒத்தி வைத்தனா்.