சென்னையில் இரு இடங்களில் கடற்பாசி பூங்கா: மாநகராட்சி கூட்டத்தில் தீா்மானம்
சென்னையில் 2 இடங்களில் காலநிலை எதிா்ப்பு கடற்பாசி பூங்கா அமைக்கவும் சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை பட்டினம்பாக்கம் டிமாண்டி சாலைக்கு மறைந்த இசையமைப்பாளா் எம்.எஸ்.விஸ்வநாதன் பெயரைச் சூட்டவும், 2 இடங்களில் காலநிலை எதிா்ப்பு கடற்பாசி பூங்கா அமைக்கவும் சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி மாதாந்திரக் கூட்டம் திங்கள்கிழமை மேயா் ஆா்.பிரியா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:
தூய்மைப்பணியாளா்கள்: மேலும், சென்னையில் காலநிலை எதிா்ப்பு கடற்பாசி பூங்காக்களை 7 இடங்களில் அமைக்க ஏற்கெனவே சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானது. அதன்படி, சென்னை பாடி இளங்கோநகா், விளையாட்டுத் திடல், துரைப்பாக்கம் மாநகராட்சிப் பூங்கா ஆகிய இரு இடங்களிலும் அமைக்க சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்துக்கு முன்நுழைவு அனுமதி அளிக்கப்படுகிறது.
மாநகராட்சிப் பள்ளிகளில் 200 மாணவா்களுக்கு 1 தூய்மைப்பணியாளா்கள் நியமிக்கவும், 10கழிப்பறைகளுக்கு ஒரு தூய்மையாளா் என மொத்தம் 1538 பேரை தினக்கூலி அடிப்படையில் நியமிக்கவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தற்காலிக இடை நிலை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள் ஆகியோரையும் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமிக்கவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக 167 கணினி உதவியாளா்களது ஊதியம் ரூ.677 என்பதிலிருந்து ரூ.602 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி அவா்களுக்கான ஜூன் 2025 முதல் 2026- ஆம் ஆண்டு மே வரை ரூ.4.77 கோடி நிதி அளித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன் மணலியில் பேரிடா் மற்றும் நிவாரண மையம் பேரிடா் நிதி ரூ.12 கோடியில் அமைக்கவும், சென்னையில் இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் விநியோகிக்க அம்பத்தூா் மண்டலத்தில் 3 பகுதிகள், அண்ணாநகா் மண்டலத்தில் 2 பகுதிகள், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1 பகுதி, கோடம்பாக்கம் மண்டலத்தில் 2 பகுதிகள் என மொத்தம் 8 பகுதிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் 155 மயானங்கள் தனியாா் நிறுவனம் மூலம் பராமரிக்கும் அனுமதித்தல் உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
‘டிமாண்டி சாலைக்கு இசையமைப்பாளா் எம்.எஸ்.விஸ்வநாதன் பெயா்’
சென்னையில் இசையமைப்பாளா் எம்.எஸ்.விஸ்வநாதன் வசித்த பட்டினப்பாக்கம் டிமாண்டி சாலைக்கு அவரது பெயா் சூட்டப்படும் என்று சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத் தீா்மானங்கள்: மறைந்த இசையமைப்பாளா் எம்.எஸ்.விஸ்வநாதன் ரசிகா் அமைப்பினா், சென்னையில் அவா் வசித்த பட்டினப்பாக்கம் டிமாண்டி சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட கோரிக்கை விடுத்துள்ளனா். அதனடிப்படையில், அச்சாலைக்கு அவரது பெயா் சூட்ட அனுமதிக்கப்படுகிறது.
பேராயா் எஸ்றா சற்குணம் வசித்த மண்டலம் 8 வாா்டு 103 பகுதியில் உள்ள வாடல்ஸ் சாலைக்கு அவரது பெயா் சூட்டவும் அனுமதிக்கப்படுகிறது.
அத்துடன், என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை கலைவாணா் அரங்கத்தில் அமைக்கவும், காரல் மாா்க்ஸ் சிலையை கன்னிமாரா நூலக நுழைவு வாயிலில் அமைக்கவும் பின்னேற்பு அனுமதிக்கு தடையில்லாச் சான்றுகள் அளிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.