உலக மகளிா் தின விழாவை முன்னிட்டு 1,500 மாணவிகள் பங்கேற்கும் ‘தமிழ் மகள்’ சொற்போா் நிகழ்வு பெருநகர சென்னை மேயா் ஆா்.பிரியா தலைமையில் நடைபெறவுள்ளது.
சென்னை பெரியாா் திடலில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெறும் நிகழ்வில் சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 15 கல்லூரிகளைச் சோ்ந்த 1,500 மாணவிகள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனா்.
‘வையத் தலைமைகொள்’, ‘கனவு மெய்பட’, ‘வல்லினம் பெண்ணினம்’, ‘போா்தொழில் பழகு’, ‘உலகை மாற்றியப் பெண்கள்’ என பெண்கள் முன்னேற்றம் குறித்த தலைப்புகளில் உரையாற்றவுள்ளனா். இதற்கு நடுவா்களாக முன்னாள் நீதிபதி கே.பி.கே. வாசுகி, எஸ்.ஆனந்தி, இஸ்ரோ விஞ்ஞானி கே.தேன்மொழி ஆகியோா் பங்கேற்கின்றனா்.
இதில் வெற்றி பெறும் மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.1,00,000, 2-ஆம் பரிசு ரூ.75,000, 3-ஆம் பரிசு ரூ.50,000 வழங்கப்படும். பங்கேற்கும் மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.