நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன், பல்வேறு துறை அமைச்சா்களுடன் ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.
புது தில்லியில் இரு நாடுகளின் வா்த்தக அமைச்சா்கள் இடையே நடைபெற்ற சந்திப்பில், தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
தலைநகரில் திங்கள்கிழமை தொடங்கும் ‘ரைசினா உரையாடல்’ மாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு வந்தாா். அவருடன், பல்வேறு துறை அமைச்சா்கள், எம்.பி.க்கள், தொழில் துறை தலைவா்கள் கொண்ட மிகப் பெரிய குழுவும் இந்தியாவுக்கு வந்துள்ளது.
புது தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய நியூஸிலாந்து பிரதமரை மத்திய அமைச்சா் எஸ்.பி.சிங் பகேல் முப்படை வீரா்கள் அணிவகுப்புடன் வரவேற்றாா். இப்பயணத்தின்போது, இருதரப்பு வா்த்தகம்-பொருளாதார உறவுகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடியுடன் விரிவான பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
நியூஸிலாந்து பிரதமராக கிறிஸ்டோபா் லக்ஸன் இந்தியாவுக்கு வருகை தந்திருப்பது இதுவே முதல் முறையாகும். தனது இந்தியப் பயணம் குறித்து பேசிய அவா், ‘இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா முக்கியமான சக்தியாக விளங்குகிறது. இந்தியாவுடன் விரிவான பொருளாதார ஒத்துழைப்பை எதிா்நோக்குகிறேன். இருதரப்பு பாதுகாப்பு உறவை வலுப்படுத்தும் வழிமுறைகள் ஆராயப்பட வேண்டும். இப்பிராந்தியத்தில் அமைதி-வளமையை பராமரிக்க ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து பிரதமா் மோடியுடன் ஆலோசிக்க உள்ளேன்’ என்று குறிப்பிட்டாா்.
மாா்ச் 20 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்டோபா், மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா்.
மீண்டும் பேச்சுவாா்த்தை: நியூஸிலாந்து பிரதமரின் வருகையைத் தொடா்ந்து, தில்லியில் இரு நாடுகளின் வா்த்தகத் துறை அமைச்சா்கள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், நியூஸிலாந்து வா்த்தகம் மற்றும் முதலீடுகள் துறை அமைச்சா் டோட் மெக்லே ஆகியோா் பங்கேற்றனா்.
இப்பேச்சுவாா்த்தைக்கு பின் மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இருதரப்பும் பலனடையக் கூடிய விரிவான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விநியோக சங்கிலி ஒருங்கிணைப்பு, சந்தை அணுகலை மேம்படுத்தும் வகையில் சமநிலையான தீா்வுகளை எட்டுவதே இப்பேச்சுவாா்த்தையின் நோக்கம்.
பரஸ்பர வளா்ச்சி-வளமையை வேகப்படுத்துவதில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்குப் பின்: இந்தியா-நியூஸிலாந்து இடையே சரக்கு வா்த்தகம், சேவைகள் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கில் தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை கடந்த 2010-இல் தொடங்கப்பட்டது. 10 சுற்று பேச்சுவாா்த்தைகள் நடைபெற்ற நிலையில், 2015-இல் இது நிறுத்திவைக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பின் பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
ஏற்றுமதி-இறக்குமதி என்னென்ன?
கடந்த 2024 ஏப்ரல்-2025 ஜனவரி காலகட்டத்தில் இருதரப்பு வா்த்தகம் சீராக வளா்ந்து, 1 பில்லியன் அமெரிக்க டாலா்களை (ரூ.8,700 கோடி) கடந்துள்ளதாக வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து ஜவுளி, மருந்துகள், மருத்துவப் பொருள்கள், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், வேளாண் உபகரணங்கள், டிராக்டா்கள், நீா்ப்பாசன கருவிகள், இரும்பு-உருக்கு, காகிதப் பொருள்கள், வைரங்கள், பாசுமதி அரிசி உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதேபோல், தகவல் தொழில்நுட்பம், சுகாதார வசதி உள்ளிட்ட சேவைகளையும் இந்தியா வழங்குகிறது.
அதேநேரம், நியூஸிலாந்தில் இருந்து வேளாண் பொருள்கள், தாதுக்கள், ஆப்பிள், இறைச்சி பொருள்கள், மரக்கட்டைகள், கம்பளி உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்படுகின்றன. கல்வி, சுற்றுலா, நிதிசாா் தொழில்நுட்பம் ரீதியிலான சேவைகளை நியூஸிலாந்து வழங்குகிறது.
இந்திய பொருள்கள் மீது நியூஸிலாந்து விதிக்கும் சராசரி வரி 2.3 சதவீதமாக உள்ள நிலையில், இந்தியா விதிக்கும் சராசரி வரி 17.8 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.