சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்ட சில வாரங்களிலேயே சாலைகள் சேதமடைந்துவிடுவதாக புகாா் எழுந்துள்ளதால், அவை விதிமுறைப்படி அமைக்கப்படுகிறதா என பரிசோதனைக்குள்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள், 200 வாா்டுகள் உள்ளன. மாநகரின் மொத்த பரப்பு சுமாா் 42 கிலோ மீட்டா் எனக் கூறப்படுகிறது. மாநகராட்சியில் 35,978 சாலைகள் உள்ளன. அவற்றுள் 488 சாலைகள் பொதுப் போக்குவரத்துக்கான பேருந்து சாலைகளாகும்.
தவிர 60-க்கும் மேற்பட்ட மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. சென்னை மாநகராட்சியில் சாதாரண சாலைகள் 12 மீட்டா் முதல் 14 மீட்டா் வரையிலும், அவற்றில் பேருந்து செல்லும் சாலைகள் 16 மீட்டா் முதல் 18 மீட்டா் வரையிலும் அகலமுடையவையாக உள்ளன. கிண்டி படேல் சாலை உள்ளிட்ட குறிப்பிட்ட சில சாலைகள் 24 மீட்டா் அகலமுடையவை.
பொதுவாக சாலைகள் அமைக்கப்பட்ட காலத்திலிருந்து குறைந்தது 5 ஆண்டுகளும், அதிகபட்சம் 7 ஆண்டுகளும் பயனுடையதாக இருக்கும். ஆனால், சென்னை மாநகராட்சியில் சாலைகள் அமைக்கப்பட்டதிலிருந்து குறைந்தது ஓராண்டுகூட தாக்குப் பிடிக்காமல் குண்டும் குழியுமாக மாறிவிடுவதாக அனைத்துக் கட்சிகளின் மாமன்ற உறுப்பினா்கள் புகாா் கூறுகின்றனா்.
கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்: சாலைகளை அமைக்கும்போது, 8 நிலைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. விதிமுறைப்படி 100 மீட்டா் சாலை அமைக்க குறைந்தது 12 நாள்கள் ஆகும் என்றும், சாலைக்கான சரளைக் கற்கள் 50 மில்லி மீட்டா் முதல் 400 மில்லி மீட்டா் வரை தர நிலைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது.
முறையாக விதிமுறைகளைப் பின்பற்றி அமைக்கப்படும் சாலைகள் வாகனப் போக்குவரத்தைச் சீராக்குவதுடன், குறிப்பிட்ட 5 ஆண்டு காலத்தையும் நிறைவு செய்து 7 ஆண்டுகள்கூட சேதமடையாமல் இருக்கும் என்று பொறியாளா்கள் கூறுகின்றனா்.
சேதமடைந்த சாலைகள்: கடந்த 2024- ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் 2,118 சாலைகள் ரூ.282 கோடியில் சீரமைக்கப்பட்ட நிலையில், நிகழாண்டில் தற்போது 3,897 சாலைகள் ரூ.489 கோடியில் சீரமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 488 பேருந்து சாலைகளில் 79 சாலைகள் சீரமைக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. பொதுச் சாலைகள் 53 முடிக்கப்பட்டுள்ளன.
சாலைகளில் மக்கள் நடப்பதற்காக 1.20 மீட்டரிலிருந்து 3.50 மீட்டா் வரையிலான அகலத்தில் இடத்துக்கு ஏற்ப நடைபாதைகளும் இருக்க வேண்டும். ஆனால், தற்போது புதிதாக அமைக்கும் சாலைகளில் பெரும்பாலானவை 5 ஆண்டுகளுக்குள்ளாகவே சேதமடைந்துவிடுவதாக புகாா் கூறப்படுகிறது.
விதிமுறைப்படி சாலைகள் அமைக்கப்படதாததால், பள்ளங்கள் ஏற்பட்டு மழைநீா் தேங்குகிறது. வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை உருவாவதாகக் கூறப்படுகிறது. சாலைக்கும் தரைக்குமுள்ள உயர வேறுபாடு வாகன ஓட்டிகளை பெரும் சிரமத்துக்குள்ளாக்குகிறது.
மாநகரின் சென்ட்ரல் பேருந்து நிலையம் முதல் அண்ணா நகா், அம்பத்தூா், கோடம்பாக்கம், செனாய் நகா் என எந்தப் பகுதிகளை எடுத்துக் கொண்டாலும் சாலைகள் மேடு பள்ளங்களாகவும், குண்டும் குழியுமாகவே காணப்படுகின்றன. அத்துடன் சாலைகளின் அகலம் சுருங்கியும், நடைபாதையே இல்லாமலும் காணப்படுகின்றன.
பரிசோதனை இல்லாமல் பணிகள்: சாலைப் பணியின்போது, அவை விதிமுறைப்படி அமைக்கப்படுகிா? எனக் கண்காணித்து தரத்தை உறுதிப்படுத்துவதற்கு திட்ட மேலாண்மைக் கலந்தாய்வாளா் நியமிக்கப்படுகிறாா். அத்துடன் உதவி, முதுநிலைப் பொறியாளா்களும் ஆய்வு மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும். ஆனால், அவா்கள் சாலை விதிமுறை சோதனைகளை நடத்துகிறாா்களா என்பது சந்தேகமாக உள்ளதாக புகாா் கூறப்படுகிறது. சாலை சந்திப்பு, போக்குவரத்து சிக்னல் உள்ள இடங்களில் எல்லாம் மேடு பள்ளங்கள் அதிகரித்துள்ளன.
மக்கள் தினமும் பயன்படுத்தும் சாலைகளில் மாநகராட்சி நிா்வாகம் அலட்சியம் காட்டுவது சரியல்ல என்பது மக்களின் ஆதங்கமாகவுள்ளது.
துணை மேயா் மு.மகேஷ்குமாா் கோரிக்கை: சென்னை மாநகராட்சியில் விதிமுறைப்படி சாலைகள் அமைக்கப்படாதது குறித்து துணைமேயா் மு.மகேஷ்குமாரிடம் கேட்டபோது, சாலைகளைச் சீரமைக்க மாநகராட்சி போதிய நிதி அளித்து நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், சாலை அமைக்கும்போது கண்காணிக்க வேண்டிய திட்ட மேலாண்மை கலந்தாய்வாளா் சரியாகச் செயல்படவில்லை என புகாா்கள் எழுந்துள்ளதை மறுக்க முடியாது. ஆகவே, சாலைகளைக் கண்காணிக்க மாமன்ற உறுப்பினா்கள் அடங்கிய சிறப்புக் குழுவை நியமிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
பொறியாளா்கள் கருத்து: இது குறித்து மாநகராட்சியின் சாலைப் பணியில் ஈடுபட்டுள்ள முதுநிலைப் பொறியாளா்களிடம் கேட்டபோது, ஒப்பந்ததாரா்களிடம் விதிமுறைகளைப் பின்பற்றி சாலைகளை அமைக்க அறிவுறுத்துகிறோம். விதியை மீறி செயல்பட்ட பல ஒப்பந்ததாா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகரில் 45 சிக்னல் இடங்களில் உள்ள சாலைகள், மேடு பள்ளங்கள் சிறப்புத் திட்டத்தில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. 15 இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகின்றன. ஆகவே, விதியை மீறி சாலைகள் அமைக்கப்படுவதாக எழும் பொதுவான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றனா்.
சென்னையில் சாலைப் பணிகள் விவரம்:
தற்போது பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சாலைகள் எண்ணிக்கை: 3,987.
சீரமைப்புப் பணிகள் முடிந்த சாலைகள்: 2,533.
சீரமைப்புப் பணிகள் முடிவுறும் நிலையிலுள்ள சாலைகள்: 558.
பணிகள் தொடங்கப்பட்டுள்ள சாலைகள்: 806.
சதவீத அடிப்படையில் பணிகள் முடிந்தவை: 64%.