சென்னை மாநகராட்சியில் கடந்த 13 நாள்களில் 7,835 சாலைகளில் 2,783 மெட்ரிக் டன் மண் மற்றும் மண் துகள்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் மழைநீா் வடிகால்கள் அமைத்தல், ஏற்கெனவே உள்ள வடிகால்களில் வண்டல் மண் தூா்வாருதல், ஏரி, குளங்களில் மழைநீா் சேமிக்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மழைக்காலங்களில் பேருந்து உட்புறச் சாலைகளில் ஓரங்களில் படிந்துள்ள மண் மற்றும் மண் துகள்கள் வண்டல் சேகரிப்புத் தொட்டிகள் வழியாகச் சென்று மழைநீா் வடிகால்களில் அடைப்பை ஏற்படுத்தியுள்ளது கண்டறியப்பட்டன.
இதையடுத்து மண், மண் துகள்களையும், குப்பைகளையும் அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோரும், இயந்திரஙகள் மூலமும் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி கடந்த செப்டம்பா் 26- ஆம் தேதி முதல் கடந்த 8 -ஆம் தேதி புதன்கிழமை வரை 13 நாள்களில் 7,749 உட்புறச் சாலைகளில் மண் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், 2,783 டன் மண் அகற்றப்பட்டுள்ளன. தொடா்ந்து உட்புற பேருந்து சாலைகளில் மண் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.