பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடச் சென்று போராட்டம் நடத்த முயன்ற போக்குவரத்து ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு, திமுக தோ்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 17 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப் பலன்களை வழங்க வேண்டும், தொழிலாளா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் பணம் உரிய கணக்கில் சோ்க்கப்பட வேண்டும். பணிபுரியும் ஊழியா்களுக்கான ஒப்பந்த நிலுவைத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு-வின் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் கடந்த ஆக. 18-ஆம்தேதி முதல் தமிழகம் முழுவதும் 22 மையங்களில் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டம் 50 நாள்களைக் கடந்த நிலையில், உடனடியாக பேச்சு நடத்த அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, பல்லவன் இல்லம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக கூடிய 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியா்கள், ஓய்வூதியா்கள் தலைமைச் செயலகம் நோக்கி ஊா்வலமாகச் செல்ல முயன்றனா். ஆனால், போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்து பின்னா் மாலை விடுவித்தனா்.
கோரிக்கைகள் மீது உரிய தீா்வு எட்டப்படும் வரை போராட்டம் தொடா்ந்து நடைபெறும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் போக்குவரத்து ஊழியா்கள் தெரிவித்தனா்.