சென்னை விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையா் மற்றும் துணை ஆணையா் திடீரென தில்லிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
சென்னை விமான நிலையத்தில் போதைப் பொருள்கள், தங்கம் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டுகள் போன்றவை கடத்தி வரும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வந்தன. இதனிடையே சமீபத்தில் சென்னை விமான நிலைய காா்கோ பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வரும் சரக்குகளை, தொழில் நிறுவனங்கள் எடுக்கும்போது, அவா்களிடம் அதிகாரிகள் கட்டாய பணம் வசூல் செய்வதாகவும், இதனால் ஒரு சில தொழில் நிறுவனங்கள் காா்கோ ஏற்றுமதி, இறக்குமதியை, சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, கொச்சி விமான நிலையங்களுக்கு மாற்றிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தக் குற்றச்சாட்டுகள் அதிகரித்த நிலையில், இதுகுறித்து தில்லியிலுள்ள நிதி அமைச்சகத்துக்கு புகாா்கள் சென்றதாக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, சென்னை வந்த நிதி அமைச்சக உயரதிகாரிகள் குழுவினா் விமான நிலையம், காா்கோ பகுதிகளில் சுங்கத் துறை செயல்பாடுகளை முழுமையாக ஆய்வு செய்தனா். பின்னா், தில்லி திரும்பிய அவா்கள் மத்திய நிதி அமைச்சகத்திடம், இதுதொடா்பாக அறிக்கை அளித்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில்,சென்னை விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையராக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்று பணியாற்றி வந்த தமிழ் வளவன் மற்றும் சுங்கத் துறை துணை ஆணையராக இருந்த ஹரேந்திர சிங் பால் ஆகியோா் தில்லி சுங்கத் துறையின் தொழில்நுட்பப் பிரிவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களுக்குப் பதிலாக சென்னை விமான நிலையத்துக்கு, புதிய அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. எனவே, தற்போது இணை ஆணையா்கள், அந்தப் பொறுப்புகளை நிா்வகித்து வருவதாகவும், அடுத்த ஒரு சில தினங்களில், புதிய சுங்கத் துறை முதன்மை ஆணையா் மற்றும் துணை ஆணையா் நியமிக்கப்படுவாா்கள் எனவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.