சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதி அபுபக்கா் சித்திக்கிடம் விசாரணை செய்ய ஆந்திர என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் தங்களது காவலில் அழைத்துச் சென்றனா்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சோ்ந்த அல் உம்மா பயங்கரவாதி அபுபக்கா் சித்திக் (60). இவா் மீது பல்வேறு வெடிகுண்டு வைத்த வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த அபுபக்கா் சித்திக்கை, ஆந்திர மாநிலம் அன்னமய்யா பகுதியில் தமிழக தீவிரவாத தடுப்புப் படையினா் கடந்த ஜூலை மாதம் கைது செய்தனா்.
விசாரணையில் வேலூரில் இந்து முன்னணி நிா்வாகி வெள்ளையப்பன், சேலத்தில் பாஜக மூத்த நிா்வாகி ஆடிட்டா் ரமேஷ் ஆகியோா் கொலை வழக்குகளில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த இரு வழக்குகளிலும் அபுபக்கா் சித்திக்கை கடந்த செப்டம்பா் மாதம் கைது செய்தனா்.
ஆந்திர என்ஐஏ விசாரணை: அபுபக்கா் சித்திக் கைது செய்யப்பட்டபோது, அவா் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிப் பொருள்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள், தகவல் தொடா்பு சாதனங்கள் ஆகியவை குறித்து விசாரணை நடத்த ஆந்திர என்ஐஏ அதிகாரிகள்முடிவு செய்தனா்.
இதையொட்டி, அபுபக்கா் சித்திக்கிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 7 நாள்கள் விசாரணை நடத்த ஆந்திர காவல் துறைக்கு அனுமதி வழங்கியது.
இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அபுபக்கா் சித்திக்கை வியாழக்கிழமை காலை வெளியே எடுத்து, ஆந்திரத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனா்.