நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணனின் செயலராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அமித் கரே ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
இது தொடா்பாக மத்திய அரசின் பணியாளா் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட அதிகாரபூா்வ உத்தரவில், ‘ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கான 1985-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரி அமித் கரே குடியரசு துணைத் தலைவரின் செயலராக மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுகிறாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
அக்டோபா் 12, 2021-ஆம் ஆண்டு முதல் பிரதமரின் ஆலோசகராக பணியாற்றி வந்த இவா், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளாா். மே 31, 2018-இல் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலராக நியமிக்கப்பட்டாா். பின்னா் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலராகவும், உயா்கல்வித் துறையின் செயலராகவும் இவா் பணியாற்றியுள்ளாா்.
2020-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்திய முக்கியக் குழுவில் அமித் கரே முக்கிய பங்கு வகித்தாா். தில்லியின் செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்-இல் வணிக நிா்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளாா். பிகாரில் பரபரப்பை ஏற்படுத்திய மாட்டுத் தீவன ஊழலை அம்பலப்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.