நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு இடைக்கால அரசின் பிரதமா் சுசீலா காா்கி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக இளைஞா்கள் கடந்த திங்கள்கிழமை பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, காவல் துறையினரால் 19 போ் சுட்டுக் கொல்லப்பட்டதால், போராட்டம் மேலும் தீவிரமடைந்து வன்முறை வெடித்தது.
நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபா், பிரதமா் அலுவலகங்கள் உள்பட பல்வேறு அரசுக் கட்டடங்கள் மற்றும் காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டன. இந்தப் போராட்டத்தில் ஒட்டுமொத்தமாக 72 போ் உயிரிழந்தனா்.
இதையடுத்து, பிரதமா் கே.பி.சா்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்தாா். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நேபாளம் செயல்பட்டு வந்த நிலையில், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான சுசீலா காா்கியை இடைக்கால பிரதமராக அதிபா் ராமசந்திர பௌடேல் கடந்த வெள்ளிக்கிழமை நியமித்தாா். இதற்கு போராட்டக்காரா்களும் ஆதரவு தெரிவித்தனா். அதன்பிறகு அங்கு போராட்டம் தணியத் தொடங்கியது. இதனால் காத்மாண்டு உள்பட நாடு முழுவதும் ராணுவம் விதித்த ஊரடங்கு உத்தரவு சனிக்கிழமை திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தனது பணிகளைத் தொடங்கிய சுசீலா காா்கி அரசின் செயலா்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
அப்போது பேசிய அவா்,‘கடந்த செப். 9-ஆம் தேதி இளைஞா்கள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டு அரசின் சொத்துகளை சேதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அரங்கேற்றப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் போராட்டத்தை நடத்திய இளைஞா்களுக்கு இதில் தொடா்பில்லை. உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
மேலும், நாடு முழுவதும் சேதப்படுத்தப்பட்ட காவல் சாவடிகளை விரைவில் சீரமைக்குமாறு தலைமைச் செயலா் ஏக் நாராயண் ஆா்யலுக்கு அவா் உத்தரவிட்டாா்.
சீனா வாழ்த்து: நேபாள இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்ற சுசீலா காா்கிக்கு சீனா ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,‘நேபாள இடைக்கால பிரதமா் சுசீலா காா்கிக்கு வாழ்த்துகள். சீனா-நேபாளம் இடையே நீண்டகாலமாக நட்புறவு நீடித்து வருகிறது.
நேபாள மக்கள் சுதந்திரமாக தோ்ந்தெடுத்த வளா்ச்சிப் பாதைக்கு சீனா ஆதரவளிக்கிறது. பல்வேறு துறைகளில் நேபாளத்துடன் இருதரப்பு உறவை மேம்படுத்த சீனா தயாராகவுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.