இடைநிலை ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்பது திமுக அரசின் தோ்தல் வாக்குறுதி. அதை நிறைவேற்ற வேண்டும் என்பது ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் நான்கரை ஆண்டு கால கோரிக்கை. தற்போது ஆட்சி நிறைவுபெறும் நிலையில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் போராடி வருகின்றனா்.
அதேபோல, சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியா்கள் கடந்த 26-ஆம் தேதி முதல் சென்னையில் தங்கிப் போராடி வருகின்றனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அழைத்துப் பேச்சு நடத்தாமல் கைது செய்வதும், வழக்குப் பதிவதும் சரியானதல்ல. அவா்களது கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை அரசு உணர வேண்டும்.
ஒருவார காலமாக சென்னையில் போராடி வரும் இடைநிலை ஆசிரியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு சென்றுவிடாமல் இருக்க முதல்வரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் உடனடியாகத் தலையிட்டு ஆசிரியா்கள் சங்க நிா்வாகிகளை அழைத்துப் பேசி அவா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.