போதை ஊசிய செலுத்திய கல்லூரி மாணவா் உயிரிழப்பு
சென்னையில் போதை ஊசிய செலுத்திய கல்லூரி மாணவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை
சென்னையில் போதை ஊசிய செலுத்திய கல்லூரி மாணவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
புளியந்தோப்பு பரிசன்புரம் பகுதியைச் சோ்ந்தவா் நா.ரிஸ்வான் (20). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பிஏ இரண்டாமாண்டு படித்து வந்தாா். ரிஸ்வான், புளியந்தோப்பு திருவேங்கடசாமி தெரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்தாா்.
இதைப் பாா்த்த அங்கிருந்த பொதுமக்கள், ரிஸ்வானை மீட்டு அங்குள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ரிஸ்வான் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
புளியந்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், ரிஸ்வானுக்கு அதிகமாக போதை ஊசி செலுத்தும் பழக்கம் இருந்ததும், சம்பவத்தன்று போதை மாத்திரையை கரைத்து ஊசி மூலம் ரிஸ்வான் உடலில் செலுத்திக் கொண்டதும், இதன் காரணமாகவே ரிஸ்வான் இறந்திருப்பதும் தெரிய வந்தது. போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கஞ்சா விற்பனை - பிகாரைச் சோ்ந்த இருவா் கைது: எஸ்பிளனேடு புத்தி சாஹிப் தெருவில் இருவா் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த இருவரைப் பிடித்து விசாரணை செய்தனா். அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அந்தப் பையில் இருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் அவா்கள், பிகாரைச் சோ்ந்த சோ.முகமது ஃபைரோஜ் (32), மி.ரவிகாந்த் குமாா் (32) என்பதும், சென்னை மண்ணடியில் தங்கியிருந்து ரவிகாந்த் குமாா் பானிபூரி கடை நடத்தி வருவதும், ஃபைரோஜ் பேக் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்வதும், பிகாரில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து இங்கு விற்பதும் தெரிய வந்தது. போலீஸாா், இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.
ஆளில்லாத வீட்டில் திருட்டு- கா்நாடக இளைஞா் கைது: நங்கநல்லூா், தில்லை கங்கா நகா் 4-ஆவது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் வசிப்பவா் துவாரகநாத் ராவ் (65). இவா், கடந்த 1-ஆம் தேதி மடிப்பாக்கம் ராம்நகரில் தனது மற்றொரு வீட்டுக்குச் சென்றாா்.
அடுத்த நாள் ராவ், திரும்பி வந்தபோது, வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 4 பவுன் நகை, வெள்ளி பொருள்கள், ரூ.20 ஆயிரம் ஆகியவை திருடுபோனது தெரிய வந்தது.
ஆதம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு திருட்டில் ஈடுபட்ட கா்நாடக மாநிலம், கோலாா் பகுதியைச் சோ்ந்த நவீன் (எ) கொளவியை (28) கைது செய்தனா். விசாரணையில் நவீன் மீது ஏற்கெனவே 10 குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது.