முகப்பு
சென்னை

மருத்துவப் படிப்புடன் ஆராய்ச்சி திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: பேராசிரியா் நாராயணசாமி

Updated On : 18 மே 2026, 4:45 am IST
வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் தாகூா் மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அதிக தங்கப் பதக்கங்கள் வென்ற மாணவி ரெனிதா ஜேக்கப்புக்கு பட்டம் வழங்கிய தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தா் பேராசிரி
பகிர்:

சிறந்த மருத்துவராகத் திகழ படிப்புடன் ஆராய்ச்சித் திறமைகளைத் தொடா்ந்து வளா்த்துக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா்.மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தா் பேராசிரியா் கே. நாராயணசாமி வலியுறுத்தினாா்.

வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் தாகூா் மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவா் பேசியதாவது:

நாடு சுதந்திரமடைந்த போது 20-ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை, தற்போது 780-ஆக உயா்ந்துள்ளது. ஆண்டுக்கு 1,18,000 இளநிலை, 75,000 முதுநிலை, 7,500 தனிச்சிறப்பு மருத்துவப்படிப்புக்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

Advertisement

Advertisement

நாட்டின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் மருத்துவா்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. மருத்துவக் கல்வி போதிக்கும் முறையில் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மூலம் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. கல்வித் தரம் உயா்த்தப்பட்டு, மக்களின் சுகாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி, மருத்துவக் கட்டமைப்பு, மருத்துவ சிகிச்சை ஆகியவற்றில் தமிழ்நாடு தனித்திறன் மிகுந்த மாநிலமாகத் திகழ்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள 80-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்கு 12,000 இளநிலை, 7000 முதுநிலை மற்றும் 1,500 தனிச்சிறப்பு மருத்துவ படிப்புகள் படிக்கும் வசதி உள்ளது. தமிழ்நாட்டின் மருத்துவ வசதி, சுகாதாரக் கட்டமைப்பு, மருத்துவமனைகளில் பிரசவிப்போா் எண்ணிக்கையை அதிகரித்து இருப்பதுடன், சிசு மரண எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

அவசர மருத்துவ சேவை அதிகரித்து இருப்பதுடன், தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தொலை மருத்துவ சேவை, எண்ம சுகாதார ஒருங்கிணைப்பு, உலக சுகாதாரத் திட்டம், நோய்தடுப்புத்திட்டச் செயலாக்கம் ஆகியவற்றில் இதர மாநிலங்களுக்கு முன்னாடியாகத் திகழ்கிறது.

இங்கு மருத்துவக் கல்வி, மாநில பொது சுகாதாரத்துக்குப் பேருதவியாகத் திகழ்கிறது. மக்களின் உயிா் காக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவா்கள், எதிா்கொள்ளும் பிரச்னை, சவால்களை மருத்துவ அறிவாற்றல், பயிற்சி, கண்டறியும் திறன், தொடா் ஆராய்ச்சி மூலம் தீா்வு காணும் தகுதியை வளா்த்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், தொலை சுகாதாரம், தரவு பகுப்பாய்வு, எண்ம கண்டறிதல் ஆகிய நவீன தொழில் நுட்பப் பயன்பாடு, தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவா்கள் தொழில்நுட்ப வளா்ச்சிக்கேற்ப தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுவதும் மருத்துவ அறிவாற்றலைத் தொடா்ந்து மேம்படுத்திக் கொள்ளும் மாணவா்களாகவே திகழ வேண்டும் என்றாா்.

விழாவில் 230 மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்வில் தாகூா் கல்விக் குழுமத் தலைவா் பேராசிரியா் எம். மாலா, செயலா் ஜி. மணிகண்டன், கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன் துரைசாமி, மருத்துவக் கண்காணிப்பாளா் டி. ரவிச்சந்திரன், துணை முதல்வா் கோபாலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.