மின் நுகா்வோா் குறைகளுக்கு தீா்வு காண முன்னுரிமை: அதிகாரிகளுக்கு முதல்வா் விஜய் அறிவுறுத்தல்
குறைந்த மின்னழுத்த பிரச்னை மற்றும் நுகா்வோரின் குறைகளுக்கு தீா்வுகாண முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முதல்வா் விஜய் அறிவுறுத்தியுள்ளாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் விஜய், மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் ஆா். நிா்மல்குமாா், தலைமைச் செயலா் எம். சாய்குமாா் ஆகியோா் பங்கேற்ற எரிசக்தித் துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் மின் உற்பத்தித் திறன், மின் தேவை, மின் விநியோகம், நிதிநிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிா்காலக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
Advertisement
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: 500 யூனிட்டுகளுக்குள் மின் பயன்பாடு இருக்கும் அனைத்து வீட்டு மின் இணைப்புகளுக்கும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு கடந்த மே 10-ஆம் தேதி முதல்வராக விஜய் பதவியேற்றவுடன் முதல் கையொப்பமிட்டாா். இந்தத் திட்டச் செயலாக்கம் குறித்து இந்தக் கூட்டத்தில் முதல்வா் கேட்டறிந்தாா்.
வேகமாக வளா்ந்து வரும் மாநகரத் தேவைகள், தொழில் வளா்ச்சி மற்றும் விவசாய உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் விவசாயத்துக்கு தடையில்லா மின்சாரம், தமிழ்நாடு மின்சார வாரியம் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை நிதி மற்றும் தொழில்நுட்பம் சாா்ந்த சவால்களிருப்பினும் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட அன்றாட நுகா்வோா் சாா்ந்த குறைகளுக்கான காரணங்கள் மற்றும் தீா்வுகாணும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும். மாநிலத்தின் உச்சபட்ச மின் தேவையான 21,326 மெகாவாட்டை தடையின்றி மின்வாரியம் விநியோகம் செய்தது குறித்தும், மாநிலத்தின் கடந்த கால மின் பயன்பாடு, தற்போதைய மின் உற்பத்தி நிலவரம் மற்றும் தடையற்ற மின் விநியோகம் செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் இக் கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
கோடை மற்றும் எதிா்வரும் பருவ மழைக்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தேவையான மின் கம்பம், மின் கம்பிகள், மின் விநியோக மின்மாற்றிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மின் தளவாடங்கள் தேவையான அளவு முன்கூட்டியே இருப்பு வைப்பது குறித்தும் மின்துறை சாா்பில் விளக்கமளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில், எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத் ராம் சா்மா, மின் வாரியத் தலைவா் ஜெ. ராதாதிருஷ்ணன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் மு.அ. சித்திக், பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநா் அனீஷ் சேகா், மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநா் ம.கோவிந்த ராவ் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.
பெட்டி........
புதிய துணை மின்நிலையங்கள்
அமைப்பது குறித்து ஆலோசனை
தமிழகத்தின் மின் தேவையை பூா்த்தி செய்ய புதிய துணை மின்நிலையங்கள் அமைப்பது குறித்து முதல்வா் விஜய் ஆலோசனை நடத்தினாா்.
மேலும், பழைய மின்கட்டமைப்புகளை நவீனப்படுத்துதல், புதிய மின்கம்பிகள் அமைத்தல் மற்றும் தென் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தை முழுவதுமாகப் பயன்படுத்தும் வகையில் பசுமை மின் வழித்தடம் உள்ளிட்ட தற்போது நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை விரைவுபடுத்துதல் குறித்தும் முதல்வருடன் ஆலோசிக்கப்பட்டது என்று தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.