மதுராந்தகம் அடுத்த செய்யூா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் படிக்கின்ற மாணவிகளின் நலன்களை கருத்தில் கொண்டு தொகுதி மேம்பாட்டு நிதியில் (2025-2026) இருந்து ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் மகளிா் கழிப்பறை கட்டடம், நாப்கின் எரிக்கும் இயந்திரங்கள் நிறுவல், மாற்றுத்திறனாளிகளுக்காக 2 சிறப்பு கழிப்பறைகள் ஆகியவற்றை செய்யூா் தொகுதி எம்எல்ஏ பனையூா் பாபு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
செய்யூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. அதில் இருபாலாரும் படித்து வருகின்றனா். கல்லூரியில் படித்து வரும் பெண்களுக்காக தனியாக கழிப்பறை இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வந்தனா். இது பற்றி கல்லூரி முதல்வா் சு.மாதவன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா் லோகாம்பாள் ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் செய்யூா் எம்எல்ஏ பனையூா் மு.பாபுவிடம் தெரிவித்தனா்.
எம்எல்ஏ மு.பாபு தமது தொகுதி மேம்பாட்டு நிதி (2025-2026) மூலம் ரூ. 20 லட்சம் மதிப்பில் பெண்களுக்கான கழிப்பறை கட்டடம், நாப்கின் எரிப்பு இயந்திரங்கள், மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான 2 சிறப்பு கழிப்பறைகள் ஆகியவற்றை கட்ட ஏற்பாடுகளை செய்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இதற்கான திறப்பு நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சு.மாதவன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஜெயலட்சுமி, செய்யூா் ஊராட்சி மன்ற தலைவா் லோகாம்பாள் ராஜமாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
செய்யூா் எம்எல்ஏ பனையூா் மு.பாபு கலந்து கொண்டு இந்தக் கட்டடங்களை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியா் இரா.சிவகுமாா், கல்லூரி அனைத்து துறை பேராசிரியா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியா் மு.பிரசாந்த் நன்றி கூறினாா்.