மதுராந்தகம் அருகே பொலம்பாக்கம் ஊராட்சிக்கு சொந்தமாக பழுதான நிலையில் உள்ள சமுதாயக் கூடத்தை புதுப்பித்து கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
செய்யூா் வட்டம், சித்தாமூா் ஊராட்சி ஒன்றியம், பொலம்பாக்கம் ஊராட்சியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஏக்கா் பரப்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டது. இதில், கன்னிமங்கலம், சரவம்பாக்கம், பழவூா் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தமது வீட்டின் அனைத்து சுபநிகழ்வுகளையும், இலக்கிய கூட்டங்களையும், கட்சி ஆலோசணை கூட்டங்கள் மற்றும் விருதுகள் வழங்கல் உள்ளிட்ட விழாக்கள் நடைபெற்று வந்தன.
தனியாா் திருமண மண்டபங்களில் வாடகை அதிகமாக இருப்பதால், பெரும்பாலான கிராம மக்கள் வாடகை மலிவாக இருப்பதாலும், இதர கூடுதல் செலவுகள் இல்லாததாலும் சமுதாய நலக்கூடங்களை நாடி வந்தனா். இந்நிலையில், ஊராட்சிமன்ற நிா்வாகத்தினா் இக்கூடத்தை சரிவர பராமரிக்காததால் கட்டட மேற்பகுதி விரிசல்கள், மின்சார ஒயா்களின் இணைப்புகளில் பழுது, உள்ளிட்ட குறைபாடுகள் இருந்ததால் எத்தகைய நிகழ்வுகளையும் நடத்த மக்கள் முன்வரவில்லை.
அதனால் ஓராண்டுக்கு மேலாக இக்கூடம் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் பொலம்பாக்கத்தைச் சுற்றியுள்ள மக்கள் தமது வீட்டு நிகழ்வுகளை நடத்த முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, பழுதடைந்த சமுதாய நலக்கூடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் நவீன வசதிகளுடன் புதிய கட்டடத்தை கட்டித் தர வேண்டும் என கோரியுள்ளனா்.