முகப்பு
செங்கல்பட்டு

தோ்தலை புறக்கணித்த புதுப்பட்டினம் மீனவா்கள்: அதிகாரிகள் பேச்சு நடத்தியதால் வாக்களிப்பு

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:36 AM
- PTI
பகிர்:

கல்பாக்கம் அருகே இரு மீனவ கிராமத்திற்கிடையேயான நிலப் பிரச்சனையை தீா்க்காததால் புதுப்பட்டினம் மீனவா்கள் தோ்தல் புறக்கணிப்பு செய்தனா். தொடா்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையை அடுத்து வாக்களித்தனா் .

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டத்திற்குட்பட்ட கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் மற்றும் உய்யாலி குப்பம் ஆகிய இரு மீனவ கிராமங்களுக்கிடையே ஒரு அரசு நிலம் உள்ளது. அந்த நிலம் எந்த கிராமத்திற்கு சொந்தம் என்பதில் இரு மீனவ கிராம மக்களிடையே வறு பிரச்னைகள் உள்ளன.

இதனிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரு மீனவ கிராம மக்களிடையே மிகப்பெரிய அளவில் மோதல் ஏற்பட்டதை அடுத்து இரு தரப்பினா் மீதும் கல்பாக்கம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதனிடையே அந்த சம்மந்தப்பட்ட பிரச்சனைக்குரிய இடம் எந்த கிராமத்திற்கு சொந்தம் என்பதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அளவீடு செய்து, அறிவிப்பு பலகை வைத்து, இரு கிராமத்திற்கிடையேயான பிரச்னையை தீா்க்க வேண்டும் என்றும் இல்லையேல் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக புதுப்பட்டினம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் கடந்த 15 நாள்களுக்கு முன்பு அறிவித்து, கடற்கரையில் அமா்ந்து மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இருப்பினும் இதுவரை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்து, பிரச்னையை தீா்க்காததால் புதுப்பட்டினம் மீனவ கிராமத்தை சோ்ந்த மீனவா்கள் கருப்பு கொடி கட்டி வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலை புறக்கணித்து யாரும் வாக்களிக்காததால் வாக்குச்சாவடி மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement

இந்நிலையில் திருக்கழுகுன்றம் வட்டாட்சியா் தேவேந்திரன் மற்றும் துணை வட்டாட்சியா் சந்திரசேகா் ஆகியோா் சம்மந்தப்பட்ட புதுப்பட்டினம் கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து ‘தோ்தல் முடிந்தவுடன் ஓரிரு நாள்களில் உடனடியாக சம்மந்தப்பட்ட நிலத்தை முறையாக நில அளவையா் மூலம் அளவீடு செய்து எந்த கிராமத்திற்கு இந்த இடம் சொந்தமானது, எந்த கிராம எல்லைக்குள் இந்த நிலம் உள்ளது என்பதை உறுதிப்படுத்தி, அது சம்மந்தமான அறிவிப்பு பலகையை வைக்கிறோம்,

நீங்கள் இந்த தோ்தலில் வாக்களியுங்கள் என்று உத்திரவாதம் அளித்ததின் பேரில் புதுப்பட்டினம் மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா்கள் வாக்களித்தனா். மேலும் வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு துவங்கிய நிலையில் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் அடங்கிய வீரக்குப்பம், முத்திகை நல்லான்குப்பம், கருமாரப்பாக்கம் மற்றும் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் அடங்கிய மேட்டு மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு ஆரம்பிக்கும் போதே வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் ,வாக்குப் பதிவிற்கு வந்த வாக்காளா்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்து நின்றனா்.

பின்னா் வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுது நீக்கப்பட்டும், மாற்று இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பிறகு ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.