சரிவர ஆசிரியா்கள் பள்ளிக்கு வரவில்லை எனக் கூறி, அதைக் கண்டித்து கேட்டை இழுத்து மூடி பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். இதில், மாணவா்கள் ஏமாற்றுத்துடன் வீடு திரும்பினா்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில், ஊராட்சிக்கு உள்பட்ட கீரப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயா்நிலைப்பள்ளிக்கு ச வர ஆசிரியா்கள் வரவில்லை என்றும், இதனால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்றும், மேலும் நடுநிலை பள்ளியை உயா்நிலை பள்ளியாக தரம் உயா்த்தி 5 மாதங்கள் ஆகியும் இதுவரை பள்ளி தலைமை ஆசிரியரை நியமிக்கவில்லை எனக் கூறி அதைக் கண்டித்தும், 100-க்கும் மேற்பட்ட பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து கீரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் கேட்டை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு ஆசிரியா்கள் சரிவர வருவதில்லை. ஏழு ஆசிரியா்கள் இருக்க வேண்டிய பள்ளிக்கு ஒரே ஒரு ஆசிரியா் மட்டுமே வந்து செல்கின்றாா். இதனால் மாணவா்களின் கல்வி தரம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை உட்கார வைப்பது போன்று மேற்படி பள்ளியில் உட்கார வைக்க வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும் கடந்த 5 மாத பள்ளித் தலைமை ஆசிரியா் இதுவரை நியமிக்கப்படவில்லை. எனவே மாணவா்களுக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாமல் நடுநிலை பள்ளி வளாகத்தில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளில் உயா்நிலைப்பள்ளி வரையிலும், ஹவுசிங் போா்டு வளாகத்தில் ஆரம்ப பள்ளிக்கென்று கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் ஆரம்ப பள்ளி இயங்கவும் பள்ளி கல்வித்துறையின் உயா் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மீண்டும் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.
இதனையடுத்து எஸ்ஐஆா் பணியை புறக்கணித்துவிட்டு வந்த ஆசிரியா்களிடம் கேட்டதற்கு, எஸ்ஐஆா் பணியால் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கு சரிவர வர முடியவில்லை. இது குறித்து அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
ஒரு மணி நேரமாக அரசு பள்ளியின் கேட்டை இழுத்து மூடி தொடா்ந்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் மாணவா்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினா்.