முகப்பு
சென்னை

பாம்பு கடிக்கு மருந்தும் இல்லை; டாக்டரும் இல்லை

பொன்னேரி, ஜூலை 15:  திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள தேவம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடிக்கு சிகிச்சை அளிக்க மருந்தும் இல்லை; டாக்டரும் இல்லை. இதன் காரணமாக 20 கி.மீ. தொலைவில

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:06 PM
பகிர்:

பொன்னேரி, ஜூலை 15:  திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள தேவம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடிக்கு சிகிச்சை அளிக்க மருந்தும் இல்லை; டாக்டரும் இல்லை.

இதன் காரணமாக 20 கி.மீ. தொலைவில் உள்ள பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தேவம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அகரம், கோளூர், வெப்பத்தூர், மாங்கோடு, சேகண்யம், பூங்குளம், கள்ளூர், சேலியம்பேடு, அண்ணாமலைச்சேரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

Advertisement

இங்கு ஒரு டாக்டர் வருவார். அவர் காலையில் காத்திருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து விட்டு சென்று விடுவார். அதன் பிறகு அங்கு பணியில் இருக்கும் செவிலியர்தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதன் காரணமாக, பாம்புக்கடி உள்ளிட்ட அவசர சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு செவிலியரால் உரிய சிகிச்சை அளிக்க முடிவதில்லை.

மேலும், இப்பகுதியில் போதுமான போக்குவரத்து வசதி இல்லாததால் நோயாளிகளை டிராக்டர் அல்லது மோட்டார் சைக்கிள் மூலம் தான் பொன்னேரி கொண்டு வர வேண்டும்.

எனவே, தேவம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர் ஒருவர் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.

நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் பொருளாதார நிலைக்கேற்ப அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனையை நாடி சிகிச்சை பெறுகின்றனர்.

ஆனால் கிராம மக்களுக்கு ஒரே வரப்பிரசாதம் அங்குள்ள அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமே உள்ளன. எனவே கிராம மக்கள் நலன் கருதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருக்க சுகாதாரத் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே நியாயமான, உடனடியான எதிர்பார்ப்பு.

துணை இயக்குநர் விளக்கம்

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட சுகாதார நலப் பணிகள் துணை இயக்குநர் சம்பத் அளித்த விளக்கம்:

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக்கடி, நாய்க்கடிக்கு மருந்து கிடையாது. இதன் காரணமாக பாம்புக் கடிக்கு உள்ளான நோயாளி விரைந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். மேலும் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்களின் பணி நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 வரை. பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை எடுத்து விடுகின்றனர் என்றார் சம்பத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.