50 ஆண்டுகள் பழமையானதால் இடிந்து சேதமுறும் நிலையில் அம்பத்தூர் ரயில்வே மேம்பாலம்!
சென்னை: கட்டி முடித்து 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆனதாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் அம்பத்தூர் ரயில்வே மேம்பாலம் இடிந்து சேதமுற்று வருகிறது. இதனால் எம்.டி.எச். சாலையில் (சென்னை- திருவள்ளூர் நெடுஞ்சா
சென்னை: கட்டி முடித்து 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆனதாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் அம்பத்தூர் ரயில்வே மேம்பாலம் இடிந்து சேதமுற்று வருகிறது.
இதனால் எம்.டி.எச். சாலையில் (சென்னை- திருவள்ளூர் நெடுஞ்சாலை) அம்பத்தூர்-ஆவடி இடையே போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எம்.டி.எச். சாலையில் அம்பத்தூர், திருநின்றவூர், ஆவடி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்ல இந்த மேம்பாலம் தான் பிரதான வாயிலாக உள்ளது.
சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் வழித்தடத்தில் கோவை, கேரள, ஆந்திரத்தில்
உள்ள முக்கிய இடங்களுக்கு ஏராளமான விரைவு ரயில்களும், புறநகர் மின் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால், சாலைப் போக்குவரத்து பாதிக்காத வகையில் இந்தப் பாலம் கடந்த 1960-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது.
அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
சென்னை-ஆவடி வழித்தடத்தில் இந்தப் பாலத்தின் வழியாகத் தான் தினமும் பஸ்கள், கண்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கடந்த அரை நூற்றாண்டாக இந்தப் பகுதியில் குடியிருப்புகளின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரித்துள்ளன. இதனால், இந்தப் பாலத்தில் இரவு பகலாக போக்குவரத்து நெரிசலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
எனினும், இந்தப் பாலத்தை ரயில்வே துறையோ அல்லது தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையோ இதுவரை முழுமையாகப் பராமரிக்கவில்லை. இதன் காரணமாக இப்போது இந்த கான்கிரீட் பாலம் வேகமாகச் சேதமடைந்து வருகிறது.
இதன் கட்டுமானங்களும், இருபுறமும் உள்ள தடுப்புச் சுவர்களும் செல்லரித்தது போல பல இடங்களில் சிமெண்ட் காரை பெயர்ந்து, இரும்புக் கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டுள்ளன.
பல்லாங்குழியான சாலை
இந்த தடுப்புச் சுவர்களுக்கு வலுசேர்க்கும் வகையில் இணைப்பாக அமைக்கப்பட்டிருந்த இரும்பு சட்டமும் துருப்பிடித்தும், பாலத்தின் மீதுள்ள சாலையும் அரிக்கப்பட்டு பள்ளமும், படுகுழியுமாக மாறியுள்ளது. இதனால், பள்ளங்களில் தேங்கும் மழை நீர், பாலத்தின் உறுதித் தன்மையைக் குலைத்து வருகிறது.
தாற்காலிகமாக இந்த சாலைப் பள்ளங்களில் செங்கல் பொடியை போட்டு நிரப்பி நெடுஞ்சாலைத் துறையினர் தாற்காலிக "நிவாரண சிகிச்சை' அளித்துள்ளனர். ஆனால்,
கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் பாலத்தின் மீதுள்ள சாலையின் பெரும்பகுதி முழுவதுமாக மண்சாலையைப் போல மாறியுள்ளது. இந்தப் பாலத்தின் இருபுறமும் "பாபிலோனியாவின் தொங்கு தோட்டம்' போல பச்சைப் பசேலென ஆல், அரசு உள்ளிட்ட மரக் கன்றுகள் வேரூன்றி வளர்ந்து வருகின்றன.
இந்த நிலையில், சென்னை- திருவள்ளூர் மாவட்டங்களின் சாலைப் போக்குவரத்துக்கு திறவு கோலாக விளங்கும் அம்பத்தூர் மேம்பாலம் சேதமுறும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மறக்கப்பட்ட மாற்றுத்திட்டம்
ஆனாலும், இந்தப் பாலத்துக்கு இணையாக அல்லது மாற்றாக புதிய பாலங்கள் எதுவும் கட்டப்படவில்லை. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரயில்வே துறையிடம் புதிய திட்டம் இதுவரை ஏதும் இல்லை.
இந்த நிதி ஆண்டில் ரயில்வே மேம்பாலங்களின் கட்டுமானப் பணிக்காக மட்டும் தெற்கு ரயில்வேக்கு ரூ.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், ரயில்வே மேம்பாலங்களின் பராமரிப்புப் பணிகளுக்காக தனியாக நிதி ஒதுக்கப்படவில்லை. பொதுவாக ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கான திட்டச் செலவில் மாநில அரசும்,
ரயில்வே துறையும் தலா 50 சதவீத நிதியை பகிர்ந்து கொள்கின்றன.
ஆனால், நெருக்கமான குடியிருப்புகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு கேந்திரங்கள் உள்ள இந்தப் பகுதியை இணைக்கும் இந்த பிரதான சாலைப் பாலத்தை பராமரிப்பதில் அரசு பாராமுகமாக உள்ளது. இது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, உடனடி தீர்வாக அம்பத்தூர் மேம்பாலத்தை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தரத் தீர்வாக எம்.டி.எச். சாலையில் புதிய பாலங்களையும், மாற்று வழித்தடங்களையும் ஏற்படுத்த வேண்டும். மாநில அரசும், ரயில்வே துறையும் வருமுன்காக்கும் வகையில் செயலாற்றுமா?