முகப்பு
சென்னை

செயலிழந்த எலக்ட்ரானிக் அறிவிப்பு பலகைகள்: தெற்கு ரயில்வேக்கு பல கோடி ரூபாய் இழப்பு

சென்னை: சென்னை கோட்ட அளவில் முக்கிய ரயில் நிலையங்களில் நிறுவப்பட்ட அறிவிப்புப் பலகைகள், தொடு திரை, டிஜிட்டல் கடிகாரம்,  பிளாஸ்மா டி.வி.க்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் சில நாள்களிலேயே செயலிழந்

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:35 PM
பகிர்:

சென்னை: சென்னை கோட்ட அளவில் முக்கிய ரயில் நிலையங்களில் நிறுவப்பட்ட அறிவிப்புப் பலகைகள், தொடு திரை, டிஜிட்டல் கடிகாரம்,  பிளாஸ்மா டி.வி.க்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் சில நாள்களிலேயே செயலிழந்து விட்டன.

  இதனால், தெற்கு ரயில்வேக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

  இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ரயில்வே தொழிற்சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

  சென்ட்ரல் ரயில் நிலையம், மூர் மார்க்கெட் வணிக வளாகம் (எம்.எம்.சி.) புறநகர் ரயில் நிலையம் ஆகிய இடங்களில்  நிறுவப்பட்ட பிரமாண்ட பிளாஸ்மா டிவிக்கள் சில நாள்களிலேயே செயல்படவில்லை. சென்ட்ரல் மட்டுமன்றி எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு புறநகர் மின் ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள 40-க்கும் மேற்பட்ட தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களும், காகிதச் சுருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் செயல்படாத நிலையில் நினைவுச் சின்னங்களாக மாறி வருகின்றன.

நீங்காத நித்திரையில் அறிவிப்பு பலகைகள்: சில மாதங்களுக்கு முன்பு சென்னை கோட்டத்தில் சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களிலும், கடற்கரை, மயிலாப்பூர் உள்ளிட்ட மேம்பால ரயில் நிலையங்களிலும் ரயில்கள் வரும் நேரம், புறப்படும் நேரம் குறித்து அறிவிக்கும் வகையில் எலக்ட்ரானிக் அறிவிப்புப் பலகைகள் பல லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டன.

 பிரதான தகவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வெளியாகும் ரயில் சேவை விவரங்கள் அனைத்தும் இந்த எலக்ட்ரானிக் அறிவிப்புப் பலகைகளில் பயணிகளுக்கு உதவும் வகையில் உடனுக்குடன் வெளியிடப்படும்.

  ஆனால், நிறுவப்பட்ட சில மாதங்களிலேயே, மத்திய கட்டுப்பாட்டு மையங்களில் (சி.பி.சி.) உள்ள மின்னணு சாதனங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த பிரம்மாண்ட அறிவிப்புப் பலகைகள் பழுதடைந்துள்ளன.  இதனால் எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்த எலக்ட்ரானிக் அறிவிப்புப் பலகைகள் பயன்பாடு இல்லாமல் செயலிழந்த நிலையில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன.

  இதேபோல குறிப்பிட்ட சில புறநகர் மின் ரயில்களில் அடுத்து வரும் இடம் குறித்து அறிவிக்கும் வகையில் நிறுவப்பட்ட டிஜிட்டல் பலகைகளும் சீராக இயங்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

சேவையை மறந்த டிஜிட்டல் கடிகாரங்கள்: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்தே சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் பிரதான போக்குவரத்து கேந்திரங்களாக திகழ்ந்தன.

  இந்த ரயில் நிலையங்களில் கோபுர மணிக்கூண்டுகளிலும், பிரதான பிளாட்பாரத்திலும் பிரமாண்டமான கடிகாரங்கள் நிறுவப்பட்டன. இந்தக் கடிகாரங்கள் பல ஆண்டுகளாக இடைவிடாது தங்களது காலம் காட்டும் சேவையைத் தொடர்ந்தன.

  இதில் நாட்டின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான, சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய மைய கோபுரத்தின் மணிக் கூண்டில் உள்ள கடிகாரம் மட்டுமே இன்னமும் இயங்கி வருகிறது. இதுதவிர பல்வேறு ரயில் நிலையங்களில் இருந்த பழங்கால கேன்னி நிறுவனத் தயாரிப்பு கடிகாரங்களும், பழையன கழிதலும் என்பதற்கேற்ப படிப்படியாக

அகற்றப்பட்டன.

 இதற்குப் பதிலாக ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின்கீழ், சிவப்பு நிற ஒளியுடன் எண்கள் ஒளிரும் எலக்ட்ரானிக் டிஜிட்டல் கடிகாரங்கள் நிறுவப்பட்டன. இப்போது, கடற்கரை, தாம்பரம் உள்ளிட்ட பல நிலையங்களில் இந்த டிஜிட்டல் கடிகாரங்களும் பழுதடைந்துள்ளதால் தங்களின் சேவையை மறந்து ஓய்வெடுக்கின்றன.

நகராத மின் ஏணிகள்: சென்னை கடற்கரை- மயிலாப்பூர்- வேளச்சேரி இடையே மேம்பால ரயில் வழித்தடத்தில் திருவல்லிக்கேணி, கோட்டூர்புரம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட நிலையங்களில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள நகரும் மின் ஏணிகள் (எஸ்கலேட்டர்) அடிக்கடி பழுதடைந்து செயல்படாமல் உள்ளன. இதே போல மேம்பால ரயில் நிலையங்களில் உள்ள மின் தூக்கிகளும் (லிஃப்ட்) அடிக்கடி வேலைநிறுத்தம் செய்வது வாடிக்கையாக மாறியுள்ளது.

  இதுகுறித்து பயணிகள் புகார் செய்து மாதக் கணக்காகியும், குளத்தில் போட்ட கல்லாக எந்த நடவடிக்கையும் இல்லை என்று பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

  ரயில் பயணிகளின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, தெற்கு ரயில்வேக்கு இந்த ஆண்டு ரூ. 110.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து சிக்னல்- தொலைத் தொடர்பு துறையினர் சார்பில் நவீன மின்னணு சாதனங்களை நிறுவ டெண்டர் அனுமதி அளிக்கப்படுகிறது.

பராமரிப்பிலும் நிதி இழப்பு: இதற்கான ஒப்பந்தத்தில், டெண்டர் அனுமதி பெறும் நிறுவனங்கள் சார்பில் ஆண்டு பராமரிப்புக்கு தனி ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

  மின்னணு சாதனங்களை நிறுவிய பின் அதற்கான தொகையைப் பெற்ற அடுத்த நாளில் இருந்தே பராமரிப்பு குறித்து இந்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், பராமரிப்புக்கும் குறிப்பிட்ட தொகையை ஆண்டுதோறும் இந்த நிறுவனங்கள் பெறுகின்றன.

ரயில்வே பணியாளர்களுக்கும் இந்த மின்னணு சாதனங்களை பராமரிப்பது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பயிற்சி அளிக்க முன்வருவது இல்லை. துறை சார்ந்த அதிகாரிகளும் இந்த சாதனங்களின் செயல்பாடு குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்வதும் இல்லை.

  இதனால், செயல்படாத எலக்ட்ரானிக் சாதனங்களால் ஆண்டுதோறும் தெற்கு ரயில்வேக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்பதே ரயில்வே தொழிற்சங்கங்கள், பயணிகளின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.