முகப்பு
சென்னை

இடமாற்றத்துக்கு இலக்காகும் ரிட்சி தெரு,​​ ஜி.பி.​ சாலை கடைகள்

சென்னை, பிப். 9: சென்னை அண்ணா சாலையை ஒட்டி அமைந்துள்ள ரிட்சி தெரு, ஜி.பி. சாலை ஆகிய பகுதிகளில் உள்ள 1,960 கடைகள் விரைவில் இடம் மாற்றம் செய்யப்பட உள்ளன. நாட்டிலேயே தில்லிக்கு அடுத்தபடியாக, எலக்ட்ரானிக்

Updated On : 27 டிசம்பர், 2023 at 2:41 PM
பகிர்:

சென்னை, பிப். 9: சென்னை அண்ணா சாலையை ஒட்டி அமைந்துள்ள ரிட்சி தெரு, ஜி.பி. சாலை ஆகிய பகுதிகளில் உள்ள 1,960 கடைகள் விரைவில் இடம் மாற்றம் செய்யப்பட உள்ளன.

நாட்டிலேயே தில்லிக்கு அடுத்தபடியாக, எலக்ட்ரானிக் சாதனங்கள், உதிரிபாகங்களின் விற்பனை கேந்திரமாக "ரிட்சி தெரு' விளங்குகிறது.

கடந்த 1975}ம் ஆண்டில் 60 கடைகள் மட்டுமே இருந்த இந்த தெருவில் இப்போது 1200}க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

மிகவும் குறுகலான இந்தத் தெருவின் கிளைகளாக நரசிங்கபுரம் தெரு, மீரான் சாகிப் தெரு, வாலர்ஸ் தெரு மற்றும் 30}க்கும் மேற்பட்ட சந்துகளில் புற்றீசல் கூட்டம் போல ஏராளமாக கடைகள் உள்ளன.

அந்தக் காலத்து கிராம போன்கள் முதல் டிவிடி ஹோம் தியேட்டர், எல்சிடி டிவி, கம்ப்யூட்டர் பாகங்கள் வரை அனைத்து வகையான எலக்ட்ரானிக் சாதனங்களும் இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கேசட்டுகளின் களஞ்சியமாக இருந்த இந்தத் தெருவில் இப்போது டிவிடி விற்பனை விசுவரூபம் எடுத்துள்ளது.

இந்தக் கடைகளுக்கு இடையே பெல், மெல்ட்ரான், பிலிப்ஸ், கெல்ட்ரான், பிபிஎல், சாம்சங் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் ஷோரூம்களும் உள்ளன.

ஜி.பி. சாலை: தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் அமைந்துள்ள ஜெனரல் பேட்டர்ஸ் சாலை சுருக்கமாக ஜி.பி. ரோடு என்று அழைக்கப்படுகிறது.

இதையொட்டி உள்ள ஸ்டேட் பாங்க் தெரு, ஒயிட்ஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களின் உதிரிபாகங்களின் விற்பனை செய்யும் 900}க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

தமிழகம் மட்டுமன்றி கேரளம், ஆந்திரத்துக்கும் மோட்டார் உதிரிபாகங்கள் இந்தப் பகுதியில் இருந்து பெருமளவு விநியோகிக்கப்படுகின்றன.

நெரிசல் அதிகரிப்பு: இதனால், இந்த இரு பகுதிகளுமே எப்போதும் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இந்த நிலையில், அண்ணாசாலை} வாலாஜா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய சட்டப் பேரவை வளாகம் மற்றும் தலைமைச் செயலகம் கட்டும் பணி இப்போது தீவிரமாக நடைபெறுகிறது.

துறைமுகம்} மதுரவாயல் இடையே கனரக வாகனங்கள் செல்ல வசதியாக மேம்பாலம் கட்டும் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி புதுப்பேட்டை அருகே கூவம் கரையோரத்தில் வசித்த 500}க்கும் மேற்பட்ட குடிசைகள் மற்றும் இதர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதையடுத்து புதுப்பேட்டையில் உள்ள உதிரிபாகங்கள் விற்கும் கடைகளை அகற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி, 22 ஏக்கர் பரப்பில் மறைமலை நகரில் விரைவில் அமைக்கப்பட உள்ள ஆட்டோ நகருக்கு முதற்கட்டமாக புதுப்பேட்டையில் தெற்கு கூவம் கரையோரப் பகுதியில் உள்ள 460 கடைகள் மாற்றப்பட உள்ளன.

பாதுகாப்பு மண்டலமாக மாற்றம்?: இந்த நிலையில், புதிய சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தைச் சுற்றியுள்ள சாலைகள், தெருக்களில் நெரிசலைக் குறைக்கவும், ஒருங்கிணைந்த அதிதீவிர பாதுகாப்பு மண்டலமாக மாற்றவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இதற்கான மாற்று இடத்தைத் தேர்வு செய்த பின்னர் வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடத்தப்படும் எனத் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.