முகப்பு
சென்னை

சாலைகள் அமைக்கும் திட்டம்: 50 இடங்களில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மையங்கள்

சென்னை, டிச. 9:÷சாலைகள் அமைக்கும் திட்டத்துக்காக மாநிலம் முழுவதும் 50 இடங்களில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மையங்கள் தலா ரூ. 8 லட்சம் செலவில் ஏற்படுத்தப்பட உள்ளன.  இந்த பிளாஸ்டிக் கழிவுகளைத் தாருடன் கல

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:22 PM
பகிர்:

சென்னை, டிச. 9:÷சாலைகள் அமைக்கும் திட்டத்துக்காக மாநிலம் முழுவதும் 50 இடங்களில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மையங்கள் தலா ரூ. 8 லட்சம் செலவில் ஏற்படுத்தப்பட உள்ளன.

 இந்த பிளாஸ்டிக் கழிவுகளைத் தாருடன் கலந்து சாலை அமைக்கப்படும்.

 சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் குப்பைகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும் பிரச்னையாக உள்ளன. அதன் மக்காத தன்மையால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அவற்றை தனியாகப் பிரித்துச் சேகரிக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்தன.

 அதன்படி, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிளாஸ்டிக்குகளைப் பிரித்து அளிக்கும்படி பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டது. எனினும், அது குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை.

 இதற்கிடையே பிளாஸ்டிக் கழிவுகளைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி அவற்றை தாருடன் சேர்த்து கலந்து சாலை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

 சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜம்புலிங்கம் தெருவில் சோதனை அடிப்படையில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலைகள் போடப்பட்டன. சாதாரணமாக தார் கொண்டு போடப்படும் சாலைகளின் ஆயுள்காலம் மூன்று ஆண்டுகள் வரை இருக்கும். ஆனால், ஜம்புலிங்கம் தெருவில் போடப்பட்ட சாலை கடந்த 6 ஆண்டுகளாக சிறப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்துவதால், தாரின் தேவை 10 முதல் 20 சதவீதம் அளவுக் குறையும்.

 இதனால், பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலைகளை அமைக்கும் திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிப்பதற்கான மையங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 50 இடங்களில் மையங்கள்: மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிப்பதற்காக 50 மையங்கள் உருவாக்கப்படுகிறது. இவை தலா ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்படும். இதற்கென நடப்பு நிதியாண்டில் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 இந்த மையத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணியும், அவற்றை இயந்திரம் மூலம் சிறு சிறு துண்டுகளாக வெட்டி தாருடன் கலப்பதற்கு ஏற்ற வகையில் தயாரிக்கும் பணியும் மேற்கொள்ளப்படும்.

 பிளாஸ்டிக் கழிவுகளைக் கலந்து தார் சாலைகளை அமைப்பதற்கென தனியாக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து, பிற இடங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.