முகப்பு
சென்னை

ஜனவரி 25-ல் தேசிய வாக்காளர் தினம்: சென்னையில் 1 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை

சென்னை, ஜன. 20: சென்னையில் வரும் 25-ம் தேதி 1 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. சென்னையில் உள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீத வாக்காளர்களுக்கு ஏற்கெனவே புகைப்படத்த

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:11 PM
பகிர்:

சென்னை, ஜன. 20: சென்னையில் வரும் 25-ம் தேதி 1 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

சென்னையில் உள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீத வாக்காளர்களுக்கு ஏற்கெனவே புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்பின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட தகுதியுள்ள 1 லட்சம் பேருக்கு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. வரும் 25-ம் தேதி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேசிய வாக்காளர் தின விழாவில் இந்த அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு அவர்களின் முகவரிக்கு, வாக்குச்சாவடி அலுவலர்களே தொடர்பு கொண்டு இதுகுறித்து தகவல் தெரிவித்து வருகின்றனர்.

அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பித்து, புகைப்படம் எடுத்துக் கொண்ட வாக்காளர்கள் அந்தந்த மண்டல அலுவலகம் அல்லது வாக்குப்பதிவு மையங்களில் இதுகுறித்த தகவல்களைப் பெறலாம்.

இன்னும் வாய்ப்பு: தமிழகம் முழுவதும் பேரவைத் தொகுதி வாரியாக, புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 10-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் விடுபட்ட வாக்காளர்களின் பெயர் சேர்க்க இன்னமும் வாய்ப்பு உள்ளது.

சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாள்கள் முன்பு இறுதி வாக்காளர் துணை பட்டியல் வெளியிடப்படும். இதற்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்-6 பெற்று, தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர் பெயர் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவும், பெயர் நீக்குவதற்கும் படிவம்-7-ஐ நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை திருத்துவதற்கு படிவம் 8-ல் விண்ணப்பிக்கலாம்.

ஆய்வில் 1.12 லட்சம் படிவங்கள்: பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்யக் கோரி ஏற்கெனவே 1.12 லட்சம் படிவங்கள் ஆய்வில் உள்ளன.

 படிவங்களை வாக்காளர்கள் சென்னையில் உள்ள 10 மண்டல அலுவலகங்களிலும், தேர்தல் பிரிவு அலுவலகத்திலும் இலவசமாகப் பெறலாம். இதுதவிர, இணையதளஙகளில் இருந்தும் பதிவிறக்கம் செய்து இந்தப் படிவங்களைப் பெறலாம். இதற்கான இணையதள முகவரி: www.ele ctions tn.nic.in    /  www.ele ctions.tn.gov.in

தேசிய வாக்காளர் தின விழா: நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தின விழா 25-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்திலும் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், இதை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு குறித்த தலைப்புகளில் பேச்சு, கட்டுரை, நடனப் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும் 25-ம் தேதி வழங்கப்படும்.

 வாக்களிக்கும் கடமை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய பிரசாரங்களை மேற்கொள்ளவும் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 884 வாக்குப்பதிவு மையங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணித் திட்டம், நேரு யுவ கேந்திரா ஆகிய அமைப்புகளின் தொண்டர்களும், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

வாக்காளர் அடையாள அட்டைகளில் திருத்தம்...

இதை முன்னிட்டு, பிப்ரவரி 1-ம் தேதிக்கு முன்பு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளில் ஏதேனும் பிழை இருப்பது குறித்து விண்ணப்பித்தவர்களுக்கு, அதில் திருத்தம் செய்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.