முகப்பு
சென்னை

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு லேப்டாப் வழங்க வருவாய்த் துறை எதிர்ப்பு

சென்னை, நவ. 15: கிராம நிர்வாக அலுவலர்களுக்கு லேப்டாப் வழங்க வருவாய்த் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சாதாரண வகை கம்ப்யூட்டர்களை கொள்முதல் செய்து அளிக்க அந்தத் துறை, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தம

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:07 PM
பகிர்:

சென்னை, நவ. 15: கிராம நிர்வாக அலுவலர்களுக்கு லேப்டாப் வழங்க வருவாய்த் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சாதாரண வகை கம்ப்யூட்டர்களை கொள்முதல் செய்து அளிக்க அந்தத் துறை, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.க்கள்) உள்ளனர்.

ஒவ்வொரு கிராமத்திலும் சான்றிதழ்களைப் பெற பரிந்துரை செய்தல், நலத் திட்ட உதவிகள் பெற தகுதியுடைய பயனாளிகளைத் தேர்வு செய்தல் உள்ளிட்ட பணிகளில் வி.ஏ.ஓ.க்கள் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக மழை, வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து வி.ஏ.ஓ.க்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

கிராமங்களில் மிகமுக்கிய அதிகாரிகளாக அவர்கள் விளங்குகின்றனர்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாடு சென்னையில் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

அந்தக் கூட்டத்தில் வி.ஏ.ஓ.க்களுக்கு லேப் டாப் (மடிக் கணினி) உள்ளிட்ட நவீன கருவிகளை வழங்க வேண்டும் என்று ஆட்சியர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய முதல்வர், ""லேப்டாப் வழங்குவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. உடனடியாக அளித்து விடலாம். அதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட துறைகள் வெளியிட வேண்டும்'' என உடனடியாக அறிவித்ததாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வருவாய்த் துறை எதிர்ப்பு: லேப்டாப்களை வழங்குவதற்கான உத்தரவை வருவாய்த் துறை வெளியிடும் எனவும், அவற்றை கொள்முதல் செய்வதற்கான பணிகளை "எல்காட்' நிறுவனம் மேற்கொள்ளும் என்றும் அரசுத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், வி.ஏ.ஓ.க்களுக்கு லேப்டாப் வழங்கும் நடவடிக்கைக்கு வருவாய்த் துறை திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

""வி.ஏ.ஓ.க்கள் பயன்பாட்டுக்கென தரமான லேப்டாப் கருவிகளை பிரிண்டருடன் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

அதிநவீன "லேப்டாப்' கருவியை ரூ.30 ஆயிரத்துக்கும் மேல் விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். அப்படி வாங்கும்போது அரசுக்கு பல கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

மேலும், அரசுப் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி தனிப்பட்ட பயன்பாட்டுக்காகவும் லேப்டாப்களை வி.ஏ.ஓ.க்கள் உபயோகிக்கக் கூடும். எனவே, அதைத் தவிர்க்க சாதாரண வகை கம்ப்யூட்டர்களை அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கலாம்'' என்று வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.

கூடுதல் செலவாகும்: லேப்டாப் வாங்கிக் கொடுத்தால், வி.ஏ.ஓ.க்கள் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று சொந்த பயன்பாட்டுக்காக இணையதளத்தை உபயோகிக்கக்கூடும்.

அவ்வாறு பயன்படுத்தும்போது இணையதளத்துக்கான மாதாந்திர கட்டணம் அதிகமாகும். அதைத் தவிர்ப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை வருவாய்த் துறை எடுத்துள்ளது. சாதாரண ரக கம்ப்யூட்டர்களை வாங்கிக் கொடுப்பதன் மூலம் அதுபோன்ற கூடுதல் செலவுகளைக் குறைக்கலாம் என அந்தத் துறை யோசனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்த பரிந்துரையை அரசுக்கு அனுப்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 12,500-க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.க்களுக்கு சாதாரண ரக கம்ப்யூட்டர்கள் வாங்குவதற்கான முடிவை தமிழக அரசு எடுக்கக் கூடும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.