முற்றிலும் சேதமடைந்த சிப்காட் சாலை
ஸ்ரீபெரும்புதூர், ஏப். 16: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் இருந்து காட்டரம்பாக்கம் கிராமத்திற்குச் செல்லும் சிப்காட் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள்
ஸ்ரீபெரும்புதூர், ஏப். 16: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் இருந்து காட்டரம்பாக்கம் கிராமத்திற்குச் செல்லும் சிப்காட் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
காட்டரம்பாக்கம் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பல தொழிற்சாலைகள் இயங்கி வருவதால் தினமும் நூற்றுக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர்.
இருக்காட்டுக்கோட்டையில் இருந்து காட்டரம்பாக்கம் செல்ல சிப்காட் கட்டுப்பாட்டில் உள்ள சாலையே பிரதான சாலையாக உள்ளது. இந்த சிப்காட் சாலையை பயண்படுத்தித்தான் காட்டரம்பாக்கம் பொதுமக்கள் இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், சென்னை ஆகிய பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை அமைத்து பல வருடங்கள் ஆன நிலையில், இதனை சீரமைக்கவோ அல்லது புதுப்பிக்கவோ சிப்காட் நிர்வாகம் முன்வரததால் இச்சாலை தற்போது குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதனால் இச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் உள்ள பள்ளங்களால் இரவு நேரங்களில் சிறு விபத்துகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இச்சாலையை சீரமைக்க சிப்காட் நிர்வாகம் முன்வரவேண்டும் என காட்டரம்பாக்கம் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.