சென்னை

பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் இல்லாத "பேரக்ஸ்'

சென்னைப் பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலர்கள் தங்குவதற்கு உள்ள "பேரக்ஸ்' (barracks) எவ்வித பராமரிப்பும் இல்லாமல் பாதுகாப்பு இன்றி இருப்பதால் காவலர்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.

கே.வாசுதேவன்

சென்னைப் பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலர்கள் தங்குவதற்கு உள்ள "பேரக்ஸ்' (barracks) எவ்வித பராமரிப்பும் இல்லாமல் பாதுகாப்பு இன்றி இருப்பதால் காவலர்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.

150 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட சென்னைப் பெருநகர காவல்துறையில் சுமார் 18 ஆயிரம் போலீஸôர் பணிபுரிகின்றனர். இதில் சட்டம்- ஒழுங்கு, குற்றப் பிரிவுக்கு அடுத்தப்படியாக ஆயுதப் படை, சிறப்பு காவல் படை பிரிவில் அதிக காவலர்கள் உள்ளனர். முக்கிய பிரதிநிதிகள் பாதுகாப்பு, விழாக் கால பாதுகாப்பு, போராட்டங்களைக் கட்டுப்படுத்துவது, கலவரத் தடுப்பு உள்ளிட்ட பல பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

நெருக்கடியான சூழ்நிலைகளிலும், பாதுகாப்பு இல்லாத இடங்களிலும் பணிபுரியும் இவர்களுக்கு தங்கும் இடம் கூட சரியாக இல்லை. இவ்வாறு பணியில் ஈடுபடுகிறவர்களை உடனே அழைத்துச் செல்லும் வகையில் எழும்பூரில் உள்ள பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் "பேரக்ஸ்' உள்ளது. இங்கு சுமார் 100 காவலர்கள் வரை உணவு அருந்தி ஓய்வெடுக்கும் கட்டமைப்பு உள்ளது. ஆனால் இப்போது இங்கு 300 காவலர்கள் தங்கி ஓய்வெடுத்துவிட்டு, பாதுகாப்புப் பணிக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.

குறிப்பாக கடந்த மாதம் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டபோது அங்கு உடனடியாக காவலர்களை பாதுகாப்புக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், காவல் ஆணையர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் தயார் நிலையில் 300 காவலர்கள் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அவர்கள் சீருடை, ஹெல்மெட், பாதுகாப்பு கேடயம் ஆகியவற்றுடன் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. இதன்படி இப்போது 80 பெண் காவலர்கள், 220 ஆண் காவலர்கள் தயார் நிலையில் அங்கு இருக்கின்றனர்.

இவர்களில் ஆண் காவலர்கள் 13, 15-வது தமிழ்நாடு சிறப்பு காவல் படைப் பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களுடன் அதிரடிப் படையினரும் அங்கு தங்குகின்றனர். இதேபோல ஆயுதப் படை பிரிவைச் சேர்ந்த பெண் காவர்களும் அங்கு தங்குகின்றனர்.

கழிப்பறை வசதி

இதில் 80 பெண் காவலர்கள் 24 மணிநேரமும் அங்கு பணியில் இருக்கும் நிலையில், அந்தக் குடியிருப்பில் அவர்களுக்குத் தனியாக கழிப்பறை கூட கிடையாது. இதனால் பெண் காவலர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க தினமும் கஷ்டப்படும் நிலை உள்ளது.

இதேபோல ஆண் காவலர்களுக்கு இருக்கும் கழிப்பறைகளில் பராமரிப்பே இல்லாமல் இருப்பதாக போலீஸôர் குற்றஞ்சாட்டுகின்றனர். இவற்றில் சில கழிப்பறைகள் பயன்படுத்த கூட முடியாதளவுக்கு இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஓய்வெடுப்பதற்கும், உணவு அருந்துவதற்கும் மட்டுமே காவலர்கள் இங்கு வரும் நிலையில், ஓய்வெடுப்பதற்குரிய சூழ்நிலை கொஞ்சமும் அங்கு இல்லை என பெண் காவலர்கள் புகார் கூறுகின்றனர்.

"பேரக்ஸ்' என்ற பெயரில் அந்தக் கட்டடத்தை காவல்துறை அதிகாரிகள் கூறினாலும், அந்த ஆஸ்பெட்டாஸ் கூரையால் ஆன அந்தக் கட்டடம் கிட்டங்கி போன்றே இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் அந்தக் கட்டடம் இருப்பதால் பல இடங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதனால் காவலர்கள் அந்தக் கட்டடத்தில் இருக்கும் வரை பயத்துடனே இருக்க வேண்டியுள்ளது. அதேபோல போதிய இடவசதி இல்லாமல் இருப்பதால் காவலர்கள் ஆணையர் அலுவலக மரத்தடிகளே ஓய்வெடுக்கும் அறைகளாக இருக்கின்றன. இதற்கு பெண் போலீஸôரும் விதிவிலக்கு அல்ல. இதில் மழைக் காலத்தில் ஆணையர் அலுவலகத்தில் ஏதாவது ஒரு கட்டடத்தின் தாழ்வாரத்தில் நின்றே பல்வேறு சிரமத்துக்கு இடையே தங்களது பொழுதை கழிக்கின்றனர்.

போராட்டக்காரர்களோடு போராடி ஓய்வெடுக்க வரும் காவலர்களுக்கு, தகுந்த அடிப்படை வசதியும், ஓய்வு அறை வசதியும் கூட பல ஆண்டுகளாக இல்லாமல் இருப்பது காவல்துறை அதிகாரிகளின் பாரபட்ச நடவடிக்கையை காட்டுகிறது என காவலர் ஒருவர் கூறுகிறார்.

பாதுகாப்பில் சிறு குறை கூட இருக்கக் கூடாது என நினைக்கும் அதிகாரிகள், அந்தப் பாதுகாப்பை வழங்கும் காவலர் நலன் குறித்து சிறிது கூட சிந்திப்பது கிடையாது என மற்றொரு காவலர் தெரிவிக்கிறார்.

இனிமேலாவது இந்த பாரபட்சத்தை நீக்கி, காவலர்களின் நலனிலும் சிறிது கவனம் செலுத்தி அவர்களுக்குத் தேவையான குறைந்தபட்ச அடிப்படை வசதிகளையாவது செய்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT