சென்னை

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சாலையோர மக்களின் தூக்கம்

சென்னையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளால் சாலையோரம் தூங்கும் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

கே.வாசுதேவன்

சென்னையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளால் சாலையோரம் தூங்கும் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் சாலையோரத்தில் மட்டும் சுமார் 16 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இதில் பாரிமுனை, ராயபுரம், பெரியமேடு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் அதிகப்படியான மக்கள் சாலையோரத்தில் வசிக்கின்றனர். இதில் வால்டாக்ஸ் சாலை, ராஜாஜி சாலைகளில் இந்த மக்கள் சாலையில் நடுவிலேயே படுத்துத் தூங்கும் காட்சியை காண முடிகிறது. இந்தப் பகுதிகளில் மட்டும் சுமார் 4 ஆயிரம் வசிக்கின்றனர்.

சாலையோரத்தில் வசிப்பவர்கள் தினக் கூலித் தொழிலாளியாக வேலை செய்பவர்களாகவும், சிறு தொழில், சிறு வியாபாரம் செய்பவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக சாலையோரத்தையே தங்களது வாழ்விடமாக கொண்டு வாழ்கின்றனர். சாலையோரத்தில் குடிசைகள், கூடாரம் அமைத்தும் இவர்கள் வசிப்பதால் நடைபாதை ஆக்கிரமிக்கப்படுவதோடு, போக்குவரத்துக்கும் இடையூறும் ஏற்படுகிறது.

அதேநேரத்தில், சாலை விபத்துகள் ஏற்படுவதற்கும் சாலையோர மக்கள் ஏதாவது ஒரு வகையில் காரணமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில் சாலையோரம் வசிப்போரும் விபத்தில் சிக்கி இறப்பதும், காயமடைவதும் அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் ஏற்படும் சாலை விபத்துக்களில் சாலையோரம் வசிப்பவர்களில் 5 பேர் இறப்பதாகவும், சுமார் 20 பேர் காயமடைவதாகவும் காவல்துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த விகிதம் அதிகரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதில் கடந்த அக்டோபர் 13-ம் தேதி சென்னை வேளச்சேரியில், போதையில் கார் ஓட்டி வந்த நபர், சாலையோரத்தில் படுத்திருந்த 3 பேர் மீது காரை ஏற்றினார். இந்த சம்பவத்தில் காயமடைந்த 3 பேரும் இறந்தனர். இதேபோன்ற பயங்கர விபத்துக்களும் சென்னையில் அவ்வப்போது நடைபெறுகின்றன. ஆனால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் இருக்கும் அவர்களை, மாநகராட்சி அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு போதிய ஆர்வம் காட்டாமலேயே இருக்கிறது.

அதேநேரத்தில் சாலையோரத்தில் வசிப்பர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு சென்னை மாநகராட்சி 28 இரவுநேர தங்கும் விடுதிகளை இயக்கி வருகிறது.

இந்த விடுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டோர், குடும்பத்தை விட்டு பிரிந்தோர், ஆதரவற்றோர் ஆகியோரே தங்குகின்றனர். சாலையோரத்தில் வசிப்போர் இங்கு பெரும்பாலும் தங்குவது கிடையாது என்கிறார் தெருவோரம் வாழ் மக்கள் உரிமைச் சங்கத் தலைவர் ஸ்ரீதர்.

ஏனெனில் இந்த விடுதிகளில் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், போதிய பாதுகாப்பும் இருப்பது கிடையாது என்கிறார் ஸ்ரீதர். மேலும் தனிநபர் அந்த விடுதியில் தங்குவதற்குரிய சாத்தியக் கூறுகள் இருந்தாலும், குடும்பத்துடன் வசிப்போர் அங்கு தங்க முடியாத நிலையே இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

இதற்கிடையே, சென்னையில் மேலும் 70 இரவுநேர தங்கும் விடுதிகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

அதேபோல, சாலையோரத்தில் வசிப்போரை இடம் மாற்றுவதற்காக புறநகரில் குடியிருப்புகளை கட்டுவதற்குரிய நடவடிக்கைகளை மாநகராட்சி எடுக்கிறது. ஆனால் நகருக்குள் தங்களது வாழ்வாதாரத்தையும், தொழிலையும் வைத்துவிட்டு, நகருக்கு வெளியே பல கிலோ மீட்டர் அப்பால் தாங்கள் செல்ல முடியாது சாலையோர மக்கள் கூறுகின்றனர்.

மேலும் ஏற்கெனவே கண்ணகி நகர் குடியிருப்புகளுக்குச் சென்ற சாலையில் வசித்தோருக்கும், குடிசைகளில் வசித்தோருக்கும் இப்போது மருத்துவம், கல்வி, தொழில் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதியடைந்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் விளைவாக நகருக்கு வெளியே குடியிருப்பு கட்டப்பட்டாலும், சாலையோரத்தில் வசிப்போர் அங்கு செல்லும் மனநிலையில் இல்லாமலேயே இருக்கின்றனர். இதன் காரணமாக சாலையோரத்தில் வசிப்போர் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்தே வருகிறது.

ஆனால், இப் பிரச்னையில் சாலையோரம் வசிக்கும் மக்களின் குறைந்தபட்ச தேவையை கூட அரசு அதிகாரிகள் அறிய முயலுவது கிடையாது என தெருவோரம் வாழ் மக்கள் உரிமைச் சங்கத் தலைவர் ஸ்ரீதர் குற்றம்சாட்டுகிறார்.

இனிமேலாவது சாலையோரம் வசிக்கும் மக்களின் நலன் கருதி, அவர்களின் தேவையை அறிந்து அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றுவதற்குரிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுகிறார்.

சாலையோரத்தில் வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பாக மட்டும் அணுகாமல், அவர்களது வாழ்வாதாரத்தையும், உயிர் ஆதாரத்தையும் கருத்தில் கொண்டு அணுகி மாநகராட்சி அவர்களுக்கு மாற்றுத் திட்டத்தை தயார் செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் நிம்மதியற்று சாலையோரத்தில் தூங்கும் மக்களை, சக மக்களைபோன்று வாழ வைக்க வேண்டிய கடமை மாநகராட்சிக்கு உண்டு என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

முரணான தகவல்கள்

சென்னையில் சாலையோரத்தில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையை பற்றி முன்னுக்கு முன் முரணான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் சாலையோரம் வசிப்பவர்கள் சுமார் 16 ஆயிரம் இருப்பதாக மாநகராட்சி கூறி வருகிறது. அதேநேரத்தில் சாலையோரம் வசிப்பவர்களுக்காக செயல்படும் சில இயக்கங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சென்னையில் சாலையோரத்தில் சுமார் 40 ஆயிரம் பேர் வசிப்பதாக கூறுகின்றனர். ஏனெனில் சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படியே சாலையோரத்தில் 40 ஆயிரம் பேர் வசித்து வந்தனர். அதன் பின்னர் மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் சாலையோரம் வசிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் மாநகராட்சி முன்னுக்கு முன் முரணான தகவல்களை தருவதாக தெருவோரம் வாழ் மக்கள் உரிமைச் சங்கம் புகார் கூறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT