முகப்பு
சென்னை

கோடையால் இளநீர், எலுமிச்சை விலை அதிகரிப்பு

கோடை காலத்தை முன்னிட்டு தாகத்தை தீர்க்கும் இளநீர், எலுமிச்சை ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:18 AM
பகிர்:

கோடை காலத்தை முன்னிட்டு தாகத்தை தீர்க்கும் இளநீர், எலுமிச்சை ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கோடை காலத்தினால் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. சமீபகாலங்களில் சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனையொட்டி பொதுமக்கள் உடல் குளிர்ச்சிக்காக இளநீரை அதிகமாக வாங்கி அருந்துகின்றனர்.

உடல் புத்துணர்ச்சியைத் தரும் எலுமிச்சை பழங்களை பழ ரசத்துக்காக அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். கோடை காலத்தின் காரணமாகவும், வரத்து குறைவின் காரணமாகவும் இவற்றின் விலை அதிகரித்துள்ளது.

இது குறித்து அம்பத்தூர் இளநீர் வியாபாரி வி.ராஜு கூறியது: சென்னையில் விற்கப்படும் இளநீர் பெரும்பாலும் தமிழகத்தில் உள்ள பொள்ளாச்சி, திருப்பாச்சி மற்றும் புதுச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து விற்பனைக்கு வருகிறது.

குறைந்த அளவில் கேரளத்திலிருந்தும் வருகிறது. பொள்ளாச்சி இளநீர் பெரிதாகவும், சுவையாகவும் இருக்கும். திருப்பாச்சி இளநீர் நடுத்தர அளவிலும், புதுச்சேரி இளநீர் சிறிய அளவிலும் இருக்கும்.

சாதாரணமாக ஏப்ரல், மே மாதங்களில் இளநீர் விலை அதிகரித்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் முதலே விலையேற்றம் காணப்பட்டது. தற்போது இது அதிகரித்துள்ளது. இந்த விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றார் ராஜு.

இளநீர் விலை விவரம் (அடைப்புக்குறிக்குள் பழைய விலை):

பொள்ளாச்சி இளநீர்:

(பெரியது)- ரூ.45 (35)

(சிறியது)- ரூ.35 (30)

திருப்பாச்சி இளநீர்:

(பெரியது)- ரூ.35 (30)

(சிறியது)- ரூ.30 (25)

புதுச்சேரி இளநீர்:

(பெரியது)- ரூ.25 (20)

(சிறியது)- ரூ.20 (15)

எலுமிச்சை பழங்கள் குறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் சந்திரன் மற்றும் சில்லறை வியாபாரி அன்புதாசன் ஆகியோர் கூறியது:

எலுமிச்சை பழங்கள் பெரும்பாலும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கூடூர், கனிகிரி, ராஜம்பேட்டை, கோடூர் ஆகிய பகுதிகளிலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருகிறது. ஏப்ரல் - மே மாதங்களில் இந்த பகுதியில் எலுமிச்சை விளைச்சல் குறைவாகவே இருக்கும். ஆகவே இந்த பகுதியிலிருந்து நாள் ஒன்றுக்கு 5 முதல் 8 லோடு வரை வந்த எலுமிச்சை பழங்கள், தற்போது 3 முதல் 4 லோடுகள் மட்டுமே வருகின்றன. தமிழகத்தில் புளியங்குடி, சங்கரன்கோயில் ஆகிய பகுதிகளில் விளையும் எலுமிச்சை பழங்கள் அருகிலுள்ள திருச்சி, மதுரை, ஒட்டன்சத்திரம், ஆகிய சந்தைகளுக்கு சென்றுவிடுவதால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தமிழக எலுமிச்சை பழங்களின் வரத்து மிகக் குறைவே.

தற்போது கோடை வெப்பத்தின் காரணமாக பொதுமக்கள் மற்றும் பழச்சாறு கடைகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் எலுமிச்சை பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.

இதனால் தேவை அதிகரித்துள்ளது. அதே சமயம் வரத்தும் குறைந்துள்ளதால் விலை அதிகரித்து காணப்படுகிறது. கோடை காலம் முடியும் வரை இந்த விலையேற்றம் நீடிக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

எலுமிச்சை பழங்கள் விலை நிலவரம் (அடைப்புக்குறிக்குள் ஒரு மாதத்துக்கு முன்பு இருந்த விலை):

1 கிலோ எலுமிச்சை பழம் (சுமார் 20 பழங்கள்)

பெரியது:ரூ.100 (60)

சிறியது:ரூ.80 (50)

முழு கட்டுரையைப் படிக்க →