சென்னை

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழக சிறையில் இசைக் குழு

இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழக மத்திய சிறைகளை மையமாகக் கொண்டு இசைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பிரம்மாண்டமாக அரங்கேற்ற இசை கச்சேரியை நடத்திய இந்த இசைக் குழு, விரைவில் அரசு நிகழ்ச்சிகளில் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளது.

கே.வாசுதேவன்

இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழக மத்திய சிறைகளை மையமாகக் கொண்டு இசைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பிரம்மாண்டமாக அரங்கேற்ற இசை கச்சேரியை நடத்திய இந்த இசைக் குழு, விரைவில் அரசு நிகழ்ச்சிகளில் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளது.

தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை நல்வழிப்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை சிறைத் துறை செயல்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக கல்விக்கு சிறைத் துறை அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் விளைவாக சிறையில் பள்ளி கல்வியும், பட்டப்படிப்பும் பயில்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக தொழில்முனைப்புக்கு சிறைத் துறை அதிகாரிகள் ஊக்கம் அளித்து வருகின்றனர். குறிப்பாக சிறு,குறு தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, கைதிகள் அவரவர் விருப்பத்தின்படி அதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்டு வந்த மோதல்களும், சண்டைகளும் குறைந்துள்ளன.

இசைக் குழு: கல்வி கற்பதற்கும், தொழில்முனைப்பு பயிற்சிக்கும் அளித்த முக்கியத்துவத்தின் காரணமாக சிறை மீதான மக்களின் கண்ணோட்டத்தை ஓரளவுக்கு மாற்றியுள்ள சிறைத் துறை, அடுத்ததாக ஒவ்வொரு கைதிகளின் தனித்திறமையைக் கண்டறிந்து, அதையும் ஊக்குவிப்பதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக மத்திய சிறைகளில் உள்ள கைதிகளில் இயற்கையாகவே இசை அறிவும், இசை ஆர்வமும் உள்ளவர்களை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில், புழல் மத்திய சிறையில் 12 கைதிகளுக்கு இசை அறிவும், ஆர்வமும் இருப்பது தெரியவந்தது. இதேபோல, மாநிலம் முழுவதும் உள்ள பிற மத்திய சிறைகளில் சுமார் 50 கைதிகள் இசை ஆர்வத்துடன் இருப்பது சிறைத் துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதையடுத்து அந்தக் கைதிகளுக்கு எந்த வகை இசை கருவியில் நாட்டம் உள்ளது, அவர்களுக்கு எந்தளவுக்கு அதில் ஆளுமை உள்ளது, அவர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்க வேண்டும் போன்ற வழிமுறைகளை சேகரித்தனர்.

பின்னர், அதன் அடிப்படையில் கைதிகளுக்கு தேவையான இசைக் கருவிகளை சிறைத் துறை வாங்கிக் கொடுத்தது. பின்னர், இசை ஆர்வமுள்ள அனைத்து கைதிகளுக்கும் பயிற்சி அளிக்கும் விதமாக அனைவரும் புழல் மத்திய சிறைக்கு அழைத்துவரப்பட்டு, அங்கு அவர்களுக்கு இசை ஆசிரியர்களும், இசைத் துறை வல்லுநர்களும் இரண்டு வாரம் முறைப்படி பயிற்சி அளித்தனர்.

பிரம்மாண்ட இசைக் கச்சேரி: கைதிகளின் இசை ஆர்வத்தை அரங்கேற்றும்விதமாக புழல் சிறையில் சில வாரங்களுக்கு முன்பு பிரம்மாண்ட இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. கைதிகளின் இசைக் குழு நடத்திய இசைக் கச்சேரியை சிறைத் துறை ஏ.டி.ஜி.பி. ஜே.கே. திரிபாதி உள்பட அனைத்து அதிகாரிகளும், கைதிகளும் சுமார் இரண்டரை மணிநேரம் கண்டுகளித்தனர். அதிகாரிகள் நினைத்ததைவிட கைதிகளின் இசைக் கச்சேரி நன்றாக இருந்ததோடு, அனைவரது ஆரவாரத்தையும் பெற்றதாக புழல் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிறைத் துறையின் சென்னை சரக டி.ஐ.ஜி. எஸ்.ராஜேந்திரன் கூறியதாவது,

இந்தியாவிலேயே வேறு எந்த சிறைத் துறையும் கைதிகளுக்காக இசைக் குழுவை இது வரை உருவாக்காத நிலையில், தமிழக சிறைத் துறையே முதல் முறையாக கைதிகளுக்கான இசைக் குழுவை உருவாக்கி அதில் வெற்றி பெற்றுள்ளது. கைதிகளுக்கு தினமும் 4 மணி நேரம் இசை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், அவர்களின் திறமையை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் கைதிகளின் இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கிடைக்கும் வெற்றியை பொருத்து தனியார் நிகழ்ச்சிகளிலும் கைதிகளை பாட வைக்கும் திட்டமும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விரைவில் சி.டி. வெளியீடு

தமிழக சிறை இசைக் குழுவினரால், இசையமைக்கப்பட்ட பாடல்கள் சி.டி.யை வெளியிடுவதற்குரிய பணிகளை சிறைத் துறை செய்து வருகிறது.

சிறை இசைக் குழுவில் 10 பெண்கள் உள்பட 50 பேர் உள்ளனர். இந்த இசைக் குழுவில் அனைத்து இசைக் கருவிகளையும் கொண்டு இசை உருவாக்கப்பட்டு வருகிறது.

இசைத் திறனை மேம்படுத்துவதன் மூலம் தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் இசைக் குழுக்களுக்கு இணையாக கைதிகளின் இசைக் குழுவும் இருக்க முடியும் என சிறைத் துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

அதேவேளையில், சிறைக் குழுவால் இசையமைக்கப்பட்ட சி.டி.யை வெளி கொண்டும் வரும் முயற்சியிலும் சிறைத் துறை ஈடுபட்டுள்ளது. பிரபலமான இசை அமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட ராகங்களுக்கு, சிறை இசைக் குழு இசை அமைக்கும் வகையில் சி.டி.யை உருவாக்க சிறைத் துறை அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

இதற்கான ஆரம்ப கட்ட ஏற்பாடுகள், செய்யப்பட்டு வருவதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT