முகப்பு
சென்னை

சாலையிலேயே சப்பாத்திகள் தயாரிப்பு: குடிசைப் பகுதி மக்களுக்கு வழங்கும் இளைஞர்கள்

சென்னையில் வெள்ள பாதிப்பு அதிகமாக ஏற்பட்ட பகுதிகளில் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர்கள் சாலையிலேயே அமர்ந்து

Updated On : 9 டிசம்பர், 2015 at 2:01 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 1:15 PM

சென்னையில் வெள்ள பாதிப்பு அதிகமாக ஏற்பட்ட பகுதிகளில் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர்கள் சாலையிலேயே அமர்ந்து சப்பாத்திகள் தயாரித்து குடிசைப் பகுதி மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
 சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட பலத்த மழை வெள்ளத்தால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் அரசின் சார்பிலும், தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள் சார்பில் உணவு, உடைகள், மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 இந்த நிவாரணப் பணிகளில் பெங்களூரைச் சேர்ந்த "காதம்பாஸ் கேட்டரிங்' மையத்தில் பணியாற்றும் 15 இளைஞர்கள் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் அதிக பாதிப்புக்கு உள்ளான தாம்பரம், முடிச்சூர், சைதாப்பேட்டை, ஜாபஃர்கான்பேட்டை, வேளச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள சாலைகளில் அமர்ந்து சப்பாத்தி, குருமா, தோசை உள்ளிட்ட உணவு வகைகளைத் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
 இதுகுறித்து அந்த மையத்தின் நிர்வாகி சண்முகானந்த் கூறியதாவது:
 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவைப் பொட்டலங்களில் அடைத்து அனுப்புவதைவிட குடிசைப் பகுதிவாழ் மக்களின் இருப்பிடங்களுக்கே நேரடியாகச் சென்று புதிதாக தயாரித்து வழங்கினால் நன்றாக இருக்கும் என நினைத்தோம்.
 இதைத் தொடர்ந்து, சமையலுக்குத் தேவையான சமையல் எரிவாயு, அடுப்பு உள்ளிட்ட உபகரணங்களுடன் சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று புதிதாக சமைத்து பொதுமக்களுக்குச் சூடான உணவு வழங்கி வருகிறோம்.
 தினமும் 7000 பேருக்கு உணவு வழங்கி வருகிறோம். இதுவரை 45,000 பேருக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதிவரை பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, பால், ஆடைகளைத் தொடர்ந்து வழங்குவோம் என்றார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.