ஆக்கிரமிப்புகளால் திணறும் கோயம்பேடு சந்தை!
சென்னை கோயம்பேடு சந்தையில் உரிமம் பெறாத வியாபாரிகள் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் உரிமம் பெறாத வியாபாரிகள் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
ஆசியாவிலேயே பெரிய காய்கறி சந்தையாக விளங்கும் சென்னை கோயம்பேடு சந்தையில் பூ, பழம், காய்கறி ஆகியவற்றை மொத்தம், சில்லறை விற்பனை செய்வதற்காக 3,500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
Advertisement
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தினமும் விற்பனைக்காக கொண்டுவரப்படும் காய்கறிகள், பழங்கள் போன்றவை சுற்றுப் பகுதிகளில் உள்ள 63 சில்லறை விற்பனைச் சந்தைகள், ஆயிரக்கணக்கான கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
இங்கு குடிநீர், சாக்கடை, மின்சாரம், வாகன நிறுத்தம், மின்சாரம், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரும் பொறுப்பை இதற்கென அமைக்கப்பட்ட கோயம்பேடு சந்தை நிர்வாகக் குழு (எம்.எம்.சி.) கவனித்து வருகிறது. இது தவிர வியாபாரிகளுக்கு உரிமம் வழங்குதல், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளையும் இந்தக் கமிட்டி மேற்கொண்டு வருகிறது.
ஆக்கிரமிப்புக் கடைகள்: இந்த நிலையில் சந்தை வளாகத்தில் 500-க்கும் மேற்பட்டோர் எந்தவித அனுமதியும் இல்லாமல் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட சில்லறை விற்பனைக் கடைகள் அமைத்து இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.
இது குறித்து சந்தை மொத்த வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூறியது: சந்தைக்கு தினமும் லாரி, வேன் உள்பட தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள்,வியாபாரிகள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் வந்து செல்வதால் அந்த நேரங்களில் சந்தை பரபரப்பாக இயங்கும்.
இந்த நிலையில் சந்தையின் முன்புற நுழைவாயில்கள், உள்பகுதி, கடைகளுக்குச் செல்லும் நடைபாதைகள் உள்பட சந்தையின் அனைத்துப் பகுதிகளிலும் உரிமம் பெறாத வியாபாரிகள் இடத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர்.
இதனால் அந்த வழிகளில் சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள், பொதுமக்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பெரிதும் இடையூறாக உள்ளது. சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும் ஓரிரு நாள்களில் அதே வியாபாரிகள் பழைய இடத்திலேயே மீண்டும் ஆக்கிரமித்து விடுகின்றனர்.
சந்தை வளாகத்தில் தினமும் குவியும் காய்கறி கழிவுகள், குப்பைகள் பெரும்பாலும் குறித்த நேரத்துக்குள் அகற்றப்படுவதில்லை. இங்கு உள்ள கழிவறைகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் சந்தை முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
இது குறித்து கோயம்பேடு சந்தை நிர்வாகக் குழு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை தொடர்ந்து அகற்றி வருகிறோம். இருப்பினும் சந்தை நிர்வாகக் குழுவிடம் உரிமம் பெறாமல் கடைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். விதிமுறையை தொடர்ந்து மீறும் வியாபாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடத்தி வருகிறோம்.
பொதுமக்கள், வியாபாரிகளின் நலன் கருதி குடிநீர் வசதி ஏற்படுத்த டெண்டர் கோரவுள்ளோம்.
மேலும் போதிய அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில வாரங்களுக்குள் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றார்.
குடிநீர் வசதி இல்லை
தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் இந்த சந்தையில் பெயரளவுக்குக் கூட குடிநீர் வசதி இல்லை.
இதனால் தனியாரிடம் கேன் குடிநீரை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். சந்தை நிர்வாகக் குழுவின் சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர்த் தொட்டிகள் பயனற்ற நிலையில் உள்ளன.
குடிநீர் வசதியைப் பொருத்த வரையில் கடந்த 19 ஆண்டுகளாக இதே நிலையே நீடிக்கிறது.
இது குறித்து சி.எம்.டி.ஏ., சந்தை நிர்வாகக் குழு ஆகியோரிடம் எத்தனையோ முறை புகார் அளித்து விட்டோம். பெயருக்கு மட்டும் சில நாள்கள் கண்காணித்து விட்டு பின்னர் மீண்டும் பராமரிப்பு பணிகள் கிடப்பில் போடப்படுகின்றன.
ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு மேல் பராமரிப்புக் கட்டணத்தை வசூலிக்கும் சந்தை நிர்வாகம் பொதுமக்கள், தொழிலாளர்கள், வியாபாரிகளின் நலன் கருதி பராமரிப்புப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்றனர்.