முகப்பு
சென்னை

தகுதி இல்லாமல் பணியில் இருந்த பேராசிரியர்கள்!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து ஒப்பந்த அடிப்படையில் அனுப்பப்பட்ட பேராசிரியர்கள் உரிய தகுதி இல்லாதவர்கள் எனக் கூறி, அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் திருப்பி அனுப்பி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 3 பிப்ரவரி, 2016 at 4:23 AM
பகிர்:

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து ஒப்பந்த அடிப்படையில் அனுப்பப்பட்ட பேராசிரியர்கள் உரிய தகுதி இல்லாதவர்கள் எனக் கூறி, அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் திருப்பி அனுப்பி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நிதி நெருக்கடி, முறைகேடு காரணமாக, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை 2013-ஆம் ஆண்டில் தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இதன் துணைவேந்தராக, கோவை பாரதியார் பல்கலை. தாவரவியல் துறைப் பேராசிரியர் எஸ்.மணியன் இப்போது உள்ளார்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, கூடுதலாக உள்ள உதவிப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் என 369 பேரை 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு பணியிடம் மாற்றி தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இவர்கள் பணியில் சேர்ந்து வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில், சென்னை, திருவண்ணாமலை, குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுக் கல்லூரிகளில் பணியில் சேருவதற்கு சென்ற 50-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உரிய கல்வித் தகுதி இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறையின்படி, பேராசிரியர் பணியில் சேர முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத தேர்ச்சியுடன் "செட்' (மாநில அளவிலான கல்லூரி ஆசிரியர் தகுதித்தேர்வு) அல்லது "நெட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஎச்.டி. (ஆராய்ச்சிப் படிப்பு) முடித்திருக்க வேண்டும்.

2009-ஆம் ஆண்டுக்கு முன்னர் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்ந்திருந்தாலும் முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத தேர்ச்சியுடன், எம்.ஃபில். படிப்பை முடித்திருப்பது கட்டாயம்.

இந்த நிலையில், பி.பி.ஏ., பி.பி.எம். போன்ற துறைகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு அனுப்பப்பட்டுள்ள பேராசிரியர்களில் பலர் இளநிலைப் பட்டப் படிப்புடன், எம்.பி.ஏ. முதுநிலை படிப்பை மட்டுமே முடித்திருக்கின்றனர். இவர்கள் இதுநாள் வரை பல்கலைக்கழகத்தில் எப்படி பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர் என்ற கேள்வி கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் சேகர் கூறியது:

உரிய கல்வித் தகுதியைப் பெறாத பேராசிரியர்களின் முழுமையான விவரங்களை சேகரித்து வருகிறோம். இதுகுறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.