சென்னை

ஓடும் அரசுப் பேருந்தில் தீ விபத்து:42 பயணிகள் உயிர் தப்பினர்

DIN

சென்னை அருகே சனிக்கிழமை காலை கர்நாடக அரசு பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில், அந்தப் பேருந்தில் பயணம் செய்த 42 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இது குறித்த விவரம்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து அம் மாநில அரசுக்குச் சொந்தமான ஏ.சி. பேருந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்னைக்குப் புறப்பட்டு வந்தது. இந்தப் பேருந்து, பின்புற என்ஜின் வசதி கொண்ட பேருந்தாகும்.
சனிக்கிழமை காலை 8.15 மணியளவில் சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே பேருந்து வந்து கொண்டிருந்தது. குறிப்பாக பேருந்து நசரத்பேட்டைக்கும் திருமழிசை பகுதிக்கும் இடையே வரும்போது, பேருந்தின் பின்பகுதியில் உள்ள என்ஜினில் கரும்புகை வெளியேறியது. இதைக் கவனித்த பேருந்தின் ஓட்டுநர் ஸ்ரீதரா (45) உடனடியாக பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கிப் பார்த்தார்.
அப்போது பேருந்தின் என்ஜின் பகுதி முற்றிலும் தீப் பிடித்து எரிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், நடத்துனர் ராமசங்கரனையும், பேருந்தில் இருந்த 42 பயணிகளையும் உடனே வெளியேறுமாறு கூறினர். இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் வேகமாக வெளியேறினர். இதில் சில பயணிகள் தங்களது உடமைகளை பேருந்தில் இருந்து எடுக்கும்போதே பேருந்து பின்பகுதி முழுவதும் தீப் பிடித்து எரிந்தது.
தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அருகே யாரும் செல்ல முடியவில்லை. இதற்கிடையே தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படை வீரர்கள், பூந்தமல்லி, அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய இடங்களில் இருந்து வந்து தீயை அணைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.
இருப்பினும் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்ததை அவர்களால் தடுக்க முடியவில்லை. சுமார் அரைமணி நேரப் போராட்டத்துக்கு பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தின் காரணமாக அந்த சாலையில் ஒரு வழிப்பாதையில் மட்டும் பாதுகாப்பு கருதி வாகனங்கள் இயக்கப்பட்டன. மற்றொரு பாதையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பெங்களூரு நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT