சென்னை

கூவம் ஆற்றுப் படுகையில் 387 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு

DIN

நீர்வழி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக சென்னையில் கூவம் ஆற்றுப் படுகையிலுள்ள 387 ஆக்கிரமிப்பு வீடுகள் வெள்ளிக்கிழமை (நவ.17) இடித்து அகற்றப்பட்டன. 
சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை அடுத்து நீர்வழி ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி உள்பட பல்வேறு துறைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னையில் நீர்வழி ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டு இதுவரை கூவம், அடையாறு ஆற்றுப் படுகையிலிருந்த 5,383 வீடுகள் அகற்றப்பட்டன. அங்கிருந்த குடும்பங்கள் குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு மாற்றப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, அண்ணாநகர் மண்டலம் அரும்பாக்கம், கூவம் ஆற்றுப் படுகையில் இருந்த 387 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிட அந்தப் பகுதி மக்களுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் வீடுகளை காலி செய்யாததால் மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) எம்.கோவிந்த ராவ் மேற்பார்வையில் 387 ஆக்கிரப்பு வீடுகளும் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பொக்லைன் இயந்திரங்களுடன் அப்பகுதிக்குச் சென்ற மாநகராட்சி அதிகாரிகள், அங்கிருந்த குடும்பத்தினரை உடனடியாக வீடுகளைக் காலி செய்து விட்டு நாவலூர், திருவொற்றியூர் பகுதியில் ஒதுக்கப்பட்ட குடிசை மாற்றுவாரிய வீடுகளுக்குச் செல்ல அறிவுறுத்தினர். மேலும், அவர்கள் வீட்டுப் பொருள்களை எடுத்துச்செல்ல 25 லாரிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. பின்னர், அவர்கள் வீடுகளை காலிசெய்ததை அடுத்து 387 ஆக்கிரமிப்பு வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன. 
இது குறித்து மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் கூறியது: கூவம் ஆற்றுப்படுகையில் 387 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டதை அடுத்து அங்கிருந்த 281 குடும்பங்களுக்கு நாவலூரிலும், 156 குடும்பங்களுக்கு திருவொற்றியூரிலும் குடிசை மாற்று வாரிய வீடுகள் வழங்கப்பட்டன. தவிர அவர்களுக்கு 3 நாட்களுக்கான உணவு வசதியும், மாணவர்களை குடியிருப்புக்கு அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கணக்கெடுப்பின் போது விடுபட்டவர்களில் தகுதியானவர்களுக்கு ஆய்வுக்குப் பின் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT