சென்னை

லஞ்சம் கொடுக்காமல் சான்றிதழ் இல்லை: உயர் நீதிமன்றம் வேதனை

DIN

லஞ்சம் கொடுக்காமல் எந்தச் சான்றிதழையும் சென்னை மாநகராட்சியில் பெற முடியாததால் மக்கள் விரக்தி அடைந்துள்ளதாக உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. 
சென்னை உயர் நீதிமன்றத்தில், ஷெனாய் நகர் பகுதியில் தனது வீட்டின் முன்புறம் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரை அகற்றக் கோரி லட்சுமி என்பவர் வழக்கு தொடர்ந்தார். 
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆஜரானார். மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்குரைஞர், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானங்கள் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார்.
நீதிபதி அதிருப்தி: அப்போது மாநகராட்சி நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி, விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் எடுக்காத சென்னை மாநகராட்சியின் செயல் மக்களிடம் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லைக்குள் விதிகளுக்கு உட்பட்டு கட்டடங்களுக்கு ஒப்புதல்கள் வழங்கப்படுகின்றதா, விதிமீறல் கட்டடங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க வேண்டும்.
ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மாநகராட்சி அதிகாரிகளின் சொத்து விவரங்கள், மாநகராட்சியில் ஊழலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஊழல் கண்காணிப்பு பிரிவின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 
சென்னை மாநகராட்சியில் கட்டடங்களுக்கான ஒப்புதல் உள்ளிட்ட எந்த சான்றிதழையும் லஞ்சம் கொடுக்காமல் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். நிலுவையில் உள்ள சொத்து வரிகளை வசூலிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT