காசிமேடு மீன் சந்தையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு
மீன்கள் அழுகாமல் இருக்க பார்மாலின்' என்னும் வேதிப் பொருள் பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் சென்னை காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை, சைதாப்பேட்டை மீன் சந்தைகளில்
மீன்கள் அழுகாமல் இருக்க பார்மாலின்' என்னும் வேதிப் பொருள் பயன்படுத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் சென்னை காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை, சைதாப்பேட்டை மீன் சந்தைகளில் உணவுப் பாதுகாப்பு, மீன்வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினர்.
சென்னையில் காசிமேடு, வானகரம், சைதாப்பேட்டை, அடையாறு, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மீன் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.
இதில், சென்னையில் விற்பனை செய்யப்படும் மீன்கள் அழுகாமல் இருக்க பார்மாலின் என்னும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுவதாவும், இவ்வாறு பதப்படுத்தப்பட்ட மீன்களை உட்கொண்டால் வயிற்று வலி முதல் புற்றுநோய் வரை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து காசிமேடு, சிந்தாதரிப்பேட்டை, சைதாப்பேட்டை ஆகிய மீன் சந்தைகளில் உள்ள கடைகளில் மீன்வளத் துறை இணை இயக்குநர் சித்ரா, உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் ஆகியோர் தலைமையில் 20 பேர் கொண்ட குழு திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, ஒவ்வொரு கடையிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது, எடுக்கப்பட்டுள்ள மீன்கள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஆய்வு முடிவில் பார்மாலின் மூலம் மீன்களைப் பதப்படுத்தியது தெரியவந்தால், மீன் கடைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.