சென்னை

பராமரிப்பற்ற இ-டாய்லெட்கள்: மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

பா. இளையபதி

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களில் அமைக்கப்பட்டுள்ள இலவச மின்னணு கழிவறைகள் (இ-டாய்லெட்) சரிவர பராமரிக்கப்படாததால் அவை உபயோகப்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கட்டணக் கழிப்பிடம், இலவசக் கழிப்பிடம் என 1,500-க்கும் மேற்பட்ட கழிப்பிடங்கள் உள்ளன. 

இதில், நீர் உபயோகத்தை சிக்கனப்படுத்தும் விதமாகவும், சுகாதாரத்தைப் பேணும் வகையிலும், சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 2016-இல் இ-டாய்லெட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் தொடக்கமாக 15 மண்டலங்களின் சாலையோரங்களில் 91 இடங்களில் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியாக 180 இ-டாய்லெட்கள் அமைக்கப்பட்டன. அதன் பிறகு இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது மாநகராட்சி முழுவதும் பல்வேறு இடங்களில் 230 இ-டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ரூ.5 லட்சம்: இந்த இ-டாய்லெட்களுக்குள் தானாக இயங்கும் மின் விசிறி, தேவைக்கேற்ப தண்ணீர், குரல் மூலம் வழிகாட்டி, சுகாதாரமான கழிவறை ஆகிய நவீன வசதிகள் உண்டு. இதற்குத் தேவைப்படும் தண்ணீர், மின் இணைப்பு, கழிவுநீர் வெளியேறுவதற்கான அமைப்பு ஆகியவை மாநகராட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தலா ரூ. 5 லட்சம் மதிப்புள்ள இந்த கழிவறைகள் ஒப்பந்த அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

உபயோகப்படுத்த முடியாத நிலையில்...: இதில், ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் வற்றியதன் காரணமாகவும், மின் இணைப்பு, கழிவு நீர் இணைப்பு முறையாக கொடுக்கப்படாத காரணத்தாலும் பாரிமுனை , திருமங்கலம், தி.நகர், காயிதே மில்லத் கல்லூரி அருகே மின்வாரிய அலுவலக சுற்றுச்சுவரை ஒட்டி அமைக்கப்பட்டவை என பல இடங்களில் அமைக்கப்பட்ட இ-டாய்லெட்கள் தற்போது உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளன. தொடக்க காலத்தில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த இ-டாய்லெட்கள் பராமரிப்பு குறைபாடு காரணமாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவில் காணப்படுகின்றன.

இதுகுறித்து சமூக நல ஆர்வலர் ராஜுமோகன் கூறியது: ஒரு மண்டலத்தில் குறைந்தது 5 முதல் 10 இ-டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும் தொகையில் அமைக்கப்பட்ட இ-டாய்லெட்கள் சிலவற்றுக்கு தண்ணீர், மின் இணைப்பு, கழிவுநீர் இணைப்புகள் முறையாக கொடுக்கப்படவில்லை. 

இதனால், மொத்தம் 230 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இ-டாய்லெட்களில் தற்போது 180 மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. 

மீதமுள்ள இ-டாய்லெட்களை செயல்பாட்டுக்கு கொண்டுவரும் விதமாக அதன் ஆழ்துளைக் கிணறுகளை ஆழப்படுத்த வேண்டும் அல்லது புதிய ஆழ்துளைக் கிணறுகளை அமைக்க வேண்டும். மேலும், பராமரிப்பு ஒப்பந்தம் முடிந்த இ-டாய்லெட்களை கண்டறிந்து அவற்றுக்கு விரைவில் ஒப்பந்தமும் விட வேண்டும் என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் கூறியது: 15 மண்டலங்களில் அமைக்கப்பட்டுள்ள 230 இ-டாய்லெட்களில் பெரும்பாலானவை நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன. இயங்காமல் இருக்கும் இ-டாய்லெட்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT