முகப்பு
சென்னை

திருவொற்றியூரில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவொற்றியூரில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

Updated On : 30 மார்ச், 2018 at 4:21 AM
பகிர்:

திருவொற்றியூரில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
திருவொற்றியூர் எர்ணாவூர் மேம்பாலத்திலிருந்து பக்கிங்காம் கால்வாய் வரை மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சாலையில் ஏராளமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை அகற்ற வேண்டும் எனக் கோரி பொன்னியம்மன் நகரைச் சேர்ந்த உமாபதி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மனுதாரர் கோரியுள்ளபடி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். முதல்கட்டமாக சுப்பிரமணியன் நகரில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட கடைகள் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இக்கடைகள் அனைத்தும் தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு பின்னர் வரிசையாகக் கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடைகள் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை நடத்தியவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீண்டகாலமாக கடைகள் வைத்திருக்கும் எங்களை கால அவகாசம் கொடுத்துத்தான் காலி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து 
சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.