எழும்பூர் ரயில் நிலையத்தில் 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 1,200 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 7, 8 நடைமேடைகளில் ரயில்வே பாதுகாப்பு படையினர்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 1,200 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 7, 8 நடைமேடைகளில் ரயில்வே பாதுகாப்பு படையினர் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த இரு நடைமேடைகளிலும் கேட்பாரற்று 54 மூட்டைகள் கிடப்பதைக் கண்டனர். அதையடுத்து அந்த மூட்டைகள் யாருடையது என போலீஸார் விசாரணை நடத்தினர்.
ஆனால் அந்த மூட்டைகளை யாரும் உரிமை கொண்டாடவில்லை. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர், அந்த மூட்டைகளை சோதனையிட்டபோது, அந்த மூட்டைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசி இருப்பதும், அவை ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் செல்வதற்காக கடத்தல் கும்பலால் கொண்டு வரப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
அதையடுத்து அந்த மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, பொது விநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.