வாடகை வழங்காததால் வீட்டுக்குள் மூதாட்டியை வைத்து பூட்டிய உரிமையாளர்
சென்னை காசிமேட்டில் வாடகை வழங்காததால் வீட்டுக்குள் மூதாட்டியை அடைத்து வைத்த உரிமையாளர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை காசிமேட்டில் வாடகை வழங்காததால் வீட்டுக்குள் மூதாட்டியை அடைத்து வைத்த உரிமையாளர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
காசிமேடு, காசிமா நகரை சேர்ந்தவர் பாப்பாத்தி (65). பூ வியாபாரம் செய்து வந்தார். இவர், அந்தப் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். அந்த வீட்டுக்கு வாடகையாக மாதம் ரூ.2,500 கொடுத்து வந்துள்ளார்.
பாப்பாத்தி மூன்று மாதங்களுக்குச் சேர்த்து மொத்தமாக வாடகை பணத்தை வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்து வந்தார். இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக வியாபாரத்துக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதால், கடந்த 4 மாதமாக வாடகையை கொடுக்க முடியவில்லையாம்.
இதனால் வீட்டின் உரிமையாளருக்கும், பாப்பாத்திக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் பாப்பாத்தி வசிக்கும் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வந்துள்ளார். வீட்டுக்குள் மூதாட்டி பாப்பாத்தி இருக்கும்போதே, அவரை உள்ளே வைத்து வெளிபக்கமாக வீட்டின் கதவை பூட்டிய உரிமையாளர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டில் இருந்து வெளியே வரமுடியாமல் பாப்பாத்தி தவித்துள்ளார். திங்கள்கிழமை காலை வரை வீட்டின் உரிமையாளர் வராததை அடுத்து அருகே வசிக்கும் தனது சகோதரி விஜயாவுக்கு செல்லிடப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து விஜயா, காசிமேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீஸார் உடனடியாக விரைந்து வந்து பூட்டை உடைத்து மூதாட்டி பாப்பாத்தியை மீட்டனர். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. மூதாட்டி வீட்டினுள் வைத்து பூட்டப்பட்டது தொடர்பாக காசிமேடு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.