மெட்ரோவில் டாக்சி, ஷேர் ஆட்டோ சேவை: 21 நாள்களில் 18,527 பேர் பயணம்
சென்னையில் குறிப்பிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ள டாக்சி, ஷேர் ஆட்டோ சேவைக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வசதியை 21 நாள்களில் 18,527 பேர் பயன்படுத்தியுள்ளனர்.
சென்னையில் குறிப்பிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ள டாக்சி, ஷேர் ஆட்டோ சேவைக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வசதியை 21 நாள்களில் 18,527 பேர் பயன்படுத்தியுள்ளனர்.
மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கான போக்குவரத்து இணைப்பை மேலும் எளிமையாக்கும் விதமாக, ஷேர் ஆட்டோ மற்றும் டாக்சி வசதி, கடந்த ஆகஸ்ட் 11 -ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த சேவையை தனியாருடன் இணைந்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்குகிறது.
இதன்படி, மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 3 கி.மீ. வரையிலான சுற்றுவட்டார பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோ மற்றும் டாக்சிகள், காலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் இயக்கப்படுகின்றன.
இதில், ஷேர் ஆட்டோவில் பயணம் செய்ய ரூ.10, டாக்சியில் பயணிக்க ரூ.15 கட்டணமாகவசூலிக்கப்படுகிறது. இச்சேவைக்கு மெட்ரோ ரயில் பயணிகளிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.
சேவை தொடங்கப்பட்ட ஆகஸ்ட் 11 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 -ஆம் தேதி வரை 21 நாள்களில், டாக்சி சேவையை 2,364 பேரும், ஷேர் ஆட்டோ வசதியை 16,163 பேரும் என மொத்தம் 18,527 பேர் பயன்படுத்தியிருக்கின்றனர் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.