சென்னை

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலை: மாநகராட்சி ஆணையர் தகவல்

DIN


வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வடகிழக்குப் பருவமழையையொட்டி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து அங்கு அதிக குதிரைத்திறன் கொண்ட பம்ப் செட்டுகள் இருப்பு வைப்பது, மழைநீர் வடிகால்வாய் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிப்பது, மழைக் காலத்தில் தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பது, சாலைகளில் விழும் மரங்களை உடனுக்குடன் அகற்றுவது, சென்னை பெருநகர குடிநீர், கழிவுநீரகற்று வாரியத்தில் உள்ள நீரேற்று நிலையங்களைத் தயார் நிலையில் வைப்பது, வெள்ள நிவாரண முகாம்களைத் தயாராக வைப்பதுடன், அங்கு தங்க வைக்கப்படும் மக்களுக்குத் தேவையான மருந்து, உணவுப் பொருள்களைத் தயார் நிலையில் வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தயார் நிலை: சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியது: மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 1,894 கி.மீ. நீளத்துக்கு 7,351 மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்படுகின்றன. இவற்றை ரூ.21 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் ரூ.15.91 கோடியில் புதிய மனித நுழைவாயில்கள் அமைப்பது, உடைந்த பகுதிகளைப் புதுப்பிப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
மழைநீர் வடிகால்கள் இணைப்பு இல்லாமல் இருந்த 469 இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 30 பெரிய கால்வாய்களில் இதுவரை 35,000 மெட்ரிக் டன் ஆகாயத் தாமரைகள், 10,000 மெட்ரிக் டன் வண்டல்கள் அகற்றப்பட்டுள்ளன.
மாநகராட்சிக்குச் சொந்தமான 171 மரஅறுவை இயந்திரங்கள், 63 மரக்கிளைகள் அகற்றும் இயந்திரங்கள், 44 மின் மோட்டார் பம்ப்புகள், 414 டீசல், பெட்ரோல் உயர் அழுத்தப் பம்ப்புகள், 130 ஜெனரேட்டர்களைத் தயார் நிலையில் வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
எச்சரிக்கை: வடகிழக்குப் பருவமழை தொடர்பாக தேவையற்ற முறையில் சமூக வலைதளங்களில் பொதுமக்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் புயல், வெள்ளம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பருவமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், மாநகராட்சி வாயிலாக முறையான தகவல்கள் அவ்வப்போது பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும். எனவே, பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்.
சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ.சண்முகசுந்தரம், காவல் துறை கூடுதல் ஆணையர் ஆர்.தினகரன், துணை ஆணையர்கள் ஆர்.லலிதா, எம்.கோவிந்த ராவ், பி.மதுசுதன் ரெட்டி, மின்சார வாரியம், பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, பேரிடர் மேலாண்மை, கடற்படை, விமானப் படை, வானிலை ஆய்வு மையம், தீயணைப்புத் துறை, போக்குவரத்துத்துறை, சுகாதாரத் துறை, ரயில்வே, பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT