சென்னை

முதுமையிலும் ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்!

DIN


சென்னையில்  80 வயதைத் தாண்டிய மூத்த வாக்காளர்கள் தங்களது வயதைப் பொருட்படுத்தாமல் இளைஞர்களுடன் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்து  வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையாற்றினர். 
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.  சென்னையைப் பொருத்தவரை வடசென்னை,  தென் சென்னை, மத்திய சென்னை என மூன்று மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்றது.   
மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் காலை 10 முதல் காலை 11.30 மணி வரையிலான இடைவெளியில் அண்ணாநகர்,  எழும்பூர்,  சேப்பாக்கம் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.  
குறிப்பாக 80 முதல் 90 வயதைத் தாண்டிய முதியோர் தங்களது வயதைப் பொருட்படுத்தாமல் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக மகன், மகள், பேரன் உள்ளிட்ட உறவினர்களின் உதவியோடு ஆர்வமுடன் வாக்குச் சாவடிகளுக்கு வந்தனர்.  பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் முதியோரை அழைத்துச் செல்வதற்காக சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டிருந்தாலும் அதில் வாக்காளர்களை அழைத்துச் செல்வதற்காக சரியான நபர்கள் பணியமர்த்தப் படவில்லை. இதனால், வயதான மற்றும் மாற்றுத்திறன் கொண்ட முதியோர்  அவதிப்பட்டனர்.  எனினும், இளைஞர்களுக்கு சற்றும் குறையாத உற்சாகத்துடன் வரிசையில் காத்திருந்தும், வெயிலைப் பொருட்படுத்தாமலும் வாக்களித்தனர்.
இது குறித்து அண்ணாநகரைச் சேர்ந்த ஜம்புகேஸ்வரி,  சேப்பாக்கத்தைச் சேர்ந்த ஆர்.ராஜலட்சுமி,  எழும்பூரைச் சேர்ந்த எம்.துரைசாமி உள்ளிட்டோர் கூறியது:  
 அனைவரும் வாக்களித்து சிறந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்வதன் மூலமே எதிர்கால இந்தியாவை வலுவாகக் கட்டமைக்க முடியும்.  ஆனால், இன்றைய சூழலில் நன்கு படித்த  இளைஞர்கள் கூட  வரிசையில் நின்று வாக்களிக்க வேண்டுமா 
என நினைக்கின்றனர்.  அதனால்தான் சென்னையில் வாக்குப்பதிவு 60 சதவீதத்தை தாண்டுவதில்லை.  வாக்களிக்க விரும்பாதவர்களுக்கும்,  அதை அலட்சியப்படுத்துபவர் களுக்கும் ஆட்சியாளர்களை கேள்வி கேட்கும் உரிமை இல்லை.  உடல்நலக்குறைவு,  முதுமை என எந்தப் பிரச்னை இருந்தாலும் இதுவரை நாங்கள் ஒரு தேர்தலில் கூட வாக்களிக்கத் தவறியதில்லை.  எனவே தேர்தலில் வாக்களிப்பதை இளைஞர்கள் தங்களது தலையாய கடமையாக நினைக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT